செல்ம்ஸ்போர்டு,
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.
முதல் இரு டி20 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனைகளாக டேனியல் வயட்-ஹாட்ஜ் மற்றும் சோபியா டங்க்லி களம் இறங்கினர். இதில் சோபியா டங்க்லி 3 ரன்னிலும், டேனியல் வயட்-ஹாட்ஜ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் 37 ரன், எமி ஜோன்ஸ் 22 ரன் எடுத்து அவுட் ஆகினர்.
மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹெதர் நைட் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 144 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹெதர் நைட் 66 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் மேத்யூஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 145 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆட உள்ளது.