லண்டன்,
இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
அவர்கள் பேரணியாக திரண்டு சென்றனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் திடீரென புகுந்தது. இதில், 4 குழந்தைகள் உள்பட 50 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ், போலீசார் உள்ளிட்ட மீட்பு குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
காருக்கு அடியில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் சிக்கி கொண்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பின்னர் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதனை லிவர்பூல் நகர மெட்ரோ மேயர் ஸ்டீவ் ரோதரம் இன்று கூறினார். சம்பவம் நடந்த 2 மணிநேரத்தில் 53 வயதுடைய இங்கிலாந்து வெள்ளை இன நபர் ஒருவரை மெர்சிசைடு போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தின்போது, சிலர் கார் ஓட்டுநரை துரத்தி சென்றனர். சிலர் கார் மீது எட்டி உதைத்தனர். எனினும், இது பயங்கரவாத தாக்குதல் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி பிரதமர் கீர் ஸ்டார்மர், மேயர் ரோதரமிடம் விவரங்களை கேட்டு அறிந்துள்ளார். அந்த பகுதி இன்று காலையும் போலீசாரின் வளையத்திற்குள் தொடர்ந்து வைக்கப்பட்டது. போலீசாரின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அதிகாரிகளும் அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இதன்பின்னர், அந்த பகுதியில் போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்பட்டது.