டேராடூன்,
உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டத்தில் சக்ரதா பகுதியில் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது. புலியருவி என்ற பெயரிலான அந்த நீர் வீழ்ச்சியில் குளிப்பதற்காக, டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். கோடை காலத்தில் வெப்பம் தணிவதற்காகவும், உடல்நலனுக்கும் அது பயனளிக்கும் என்ற வகையிலும், அருவி குளியலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், டெல்லி சுற்றுலாவாசி உள்பட 2 பேர் நேற்று மாலை புலியருவியில் குளித்து கொண்டிருந்தபோது, மரம் ஒன்று திடீரென அருவியில் இருந்து நீர் வழியே அவர்களின் மீது விழுந்துள்ளது.
இதில் அவர்கள் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதன்பின்பு சிகிச்சை பலனின்றி அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அல்கா ஆனந்த் (வயது 55) மற்றும் சக்ரதா பகுதியை சேர்ந்த கீத்ராம் ஜோஷி (வயது 38) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இதனால், அந்த பகுதிக்கு சுற்றுலாவுக்காக வந்திருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டனர். நீர் வீழ்ச்சியில் மரம் விழுந்து பலியான இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.