மும்பை,
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்திலும் 25ம் தேதி முதல் பருவமழை தொடங்கியுள்ளது. அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல், மரம் முறிந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மராட்டியத்தின் மும்பையில் விக்ரோளி நகர் கனம்வார் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ் நாயக் (வயது 26). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நேற்று இரவு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள மரம் முறிந்து தேஜஸ் நாயக் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த தேஜஸ் நாயக்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தேஜஸ் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.