பனாமா சிட்டி: இந்தியா அமைதியை விரும்பினாலும், பாகிஸ்தான் அதற்கு தயாராக இல்லை என்று பனாமா நாட்டுக்குச் சென்றுள்ள இந்திய குழுவுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் நாடாளுமன்றக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழு, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடான பனாமாவில் வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாடியது.
அப்போது பேசிய திருவனந்தபுரம் எம்பி சசி தரூர், “இந்தியா அமைதியாக இருக்க விரும்புகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எல்லையின் மறுபக்கத்தில் உள்ள எங்கள் நண்பர்கள்(பாகிஸ்தான்) அதை விரும்புவதில்லை. அவர்கள் கட்டுப்படுத்தாத, நாங்கள் கட்டுப்படுத்தும் பிரதேசத்தை(காஷ்மீர்) அவர்கள் விரும்புவதாக நம்புவதால் அவர்கள் எங்களை மீண்டும் மீண்டும் தாக்குகின்றனர். இது இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பகுதி. நாங்கள் மீண்டும் மீண்டும் ஒரு குறிப்பிட்ட விலையை செலுத்த வேண்டியிருந்தாலும் அதை நாங்கள் அவர்களுக்குக் கொடுக்கப் போவதில்லை.
கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக நாங்கள் தொடர் தாக்குதல்களைச் சந்தித்துள்ளோம். 1989 ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த முதல் தாக்குதலிலிருந்து திரும்பிப் பார்க்கும்போது, மீண்டும் மீண்டும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நாங்கள் கண்டிருக்கிறோம்.
வலி, துக்கம், காயங்கள், இழப்புகள் ஆகியவற்றை நாங்கள் தொடர்ந்து தாங்கிக் கொண்டு வருகிறோம். தற்போது, சர்வதேச சமூகத்திடம் சென்று, எங்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் என்று சொல்கிறோம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். குற்றவாளிகளை அடையாளம் கண்டு வழக்குத் தொடர குற்றவாளிகள் மீது அழுத்தம் கொடுங்கள்.
பயங்கரவாதிகளை கையாள்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவென்றால், பயங்கரவாதிகள் தாங்கள் கொடுக்க வேண்டிய விலையை உணர்ந்துள்ளனர், அதில் எந்த சந்தேகமும் இல்லை. 2015 செப்டம்பரில் உரி தாக்குதல் நடந்தபோது இந்தியா முதல் முறையாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கட்டுப்பாட்டுக் கோட்டை உடைத்து ஒரு பயங்கரவாத தளத்தின் மீது ஒரு சர்ஜிக்கல் தாக்குதலை நடத்தியது. அதற்கு முன் நாங்கள் அவ்வாறு செய்ததில்லை. கார்கில் போரின் போது கூட, நாங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கவில்லை; உரியில், நாங்கள் செய்தோம்.
பின்னர் 2019 ஜனவரியில் புல்வாமாவில் தாக்குதல் நடந்தது. இந்த முறை, நாங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டை மட்டுமல்ல, சர்வதேச எல்லையையும் தாண்டி, பாலகோட்டில் உள்ள பயங்கரவாத தலைமையகத்தைத் தாக்கினோம்.
இந்த முறை, நாங்கள் அந்த இரண்டையும் தாண்டிவிட்டோம். நாங்கள் கட்டுப்பாட்டுக் கோட்டையும் சர்வதேச எல்லையையும் தாண்டிச் சென்றது மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மையப்பகுதி உட்பட ஒன்பது இடங்களில் பயங்கரவாத தளங்கள், பயிற்சி மையங்கள், பயங்கரவாத தலைமையகங்களைத் தாக்கியுள்ளோம்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின்போது, பாதிக்கப்பட்ட சில பெண்கள் தங்களையும் கொன்றுவிடுமாறு கூறி அழுதுள்ளனர். அதற்கு அந்த பயங்கரவாதிகள், ‘இல்லை, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள், உங்களுக்கு என்ன நடந்தது என்று சொல்லுங்கள்’ என்று கூறி இருக்கிறார்கள். அந்த பெண்களின் அழுகுரல்களை நாங்கள் கேட்டோம். நமது பெண்களின் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகள் ரத்தம் சிந்த வேண்டும் என்று இந்தியா முடிவு செய்தது. 26 பெண்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை அழித்து அவர்களின் திருமண வாழ்க்கையைப் பறித்ததால், ஆபரேஷன் சிந்தூர் அவசியம் என்பதை நமது பிரதமர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.” என்று தெரிவித்தார்.
பனமாவின் முக்கிய இந்திய கலாச்சார நிறுவனமான சோசிடாட் ஹிந்தோஸ்தானா டி பனாமாவில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் நினைவாக, ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சசி தரூர் தலைமையிலான குழுவில் சர்ஃபராஸ் அகமது, ஹரிஷ் பாலயோகி, ஷஷாங் மணி திரிபாதி, தேஜஸ்வி சூர்யா, புபனேஷ்வர் காலிதா, மல்லிகார்ஜூன் தேவ்தா, மிலிந்த் தியோரா, அமெரிக்காவுக்கான முன்னாள் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.