சண்டிகர்: ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின் 27-வது செக்டாரில் உள்ள ஒரு தெருவில் காரை நிறுத்திய இவர்கள், காரை பூட்டிக்கொண்டு விஷம் குடித்தனர்.
இவர்கள் காருக்குள் உயிருக்கு போராடுவதை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து கார் கதவை உடைத்து அனைவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அனைவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
காரில் இருந்து தற்கொலை குறிப்பை போலீஸார் கைப்பற்றினர். கடன் சுமை காரணமாக இவர்கள் இத்துயர முடிவுக்கு வந்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் முழுமையான விசாரணைக்கு பிறகே இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும் என போலீஸ் அதிகாரிகள் கூறினர்.