IPL 2025, Punjab Kings vs Mumbai Indians : ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அத்துடன் 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோத உள்ளது. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் முதன்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
மும்பை அணி ரன்கள் குவிப்பு
இப்போடி மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது. இருப்பினும் நடுவர்கள் முழு 20 ஓவர் போட்டியாக நடத்த திட்டமிட்டனர். அதன்படி டாஸ் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, மும்பை அணி பேட்டிங் ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 203 ரன்கள் குவித்தது. பேரிஸ்டோவ் 38, திலக் வர்மா 44, சூர்யகுமார் யாதவ் 44, நமன் தீர் 37 என நான்கு பேரின் அதிரடியால் இந்த ஸ்கோரை அந்த அணி எடுத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய வெற்றி இலக்கையும் நிர்ணயித்தது. ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் போட்டிக்கு முன்பு வரை 200 ரன்களுக்கு மேல் எந்த அணியும் இதுவரை மும்பை அணியிடம் சேஸ் செய்ததில்லை. இந்த சாதனை இருந்ததால் இம்முறையும் மும்பை வெற்றி பெறும் என எல்லோரும் எதிர்பார்த்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி
ஆனால், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் மைதானத்தில் ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அவரின் அதிரடியால் ஒரு ஓவர் மீதம் இருக்கும்போதே பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் அவுட்டானாலும் இன்னொரு ஓப்பனர் ஆர்யா 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அவுட்டானார். 2 விக்கெட்டுகள் சீக்கிரம் விழுந்த நிலையில் 3வது விக்கெட்டுக்கு ஜாஸ் இங்கிலீஸ், ஸ்ரேயாஸ் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினர். இங்கிலீஸ் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ஸ்ரேயாஸ் 87 ரன்கள் எடுத்தார். நேகல் வதேரா தன்னோட பங்கிற்கு அதிரடியாக ஆடி 48 ரன்கள் எடுத்தார். முடிவில் பஞ்சாப் அணி 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி – பஞ்சாப் ; யார் சாம்பியன்?
அத்துடன் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. இதில் இரு அணிகளுமே ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை இதுவரை வென்றதில்லை. எந்த அணி வெற்றி பெற்றாலும் ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் அணியாக மாறும். அந்தவகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஐபிஎல் 2025 தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. இன்னொரு அணி முதல் சாம்பியன் பட்டத்துக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் என தான் கேப்டனாக இருந்த மூன்று வெவ்வேறு அணிகளையும் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற முதல் பிளேயர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் படைத்தார்.