புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அரிய நிகழ்வாக 16 எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து வலியுறுத்தி உள்ளன.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்திய வெளியுறவு கொள்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விவாதம் தேவை என்பதை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன. இதையடுத்து, 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறுகையில், “ இந்த முயற்சி நாடாளுமன்றக் கட்சி மட்டத்தில் மட்டும் எடுக்கப்படவில்லை, மாறாக 16 அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான விவாதம் என்பது துடிப்பான ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும். அரசு நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு. நாடாளுமன்றம் மக்களுக்கு பொறுப்பு” என்றார்.