WTC Final: ரபாடா '5-fer'.. ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்மித், வெப்ஸ்டர்!

AUS vs SA: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் புவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என கூறி அவர் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். 

கேப்டன் டெம்பா பவுமா நினைத்து போல் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. ஆஸ்திரேலியா அணியும் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. முதலில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழந்தார். 20 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன்கள் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இவரை அடுத்து கேமரூன் கிரீன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்களையுமே ரபாடா தான் எடுத்தார். சொல்லப்போனால் ரபாடாவுக்கு இன்றைய தினம் நன்றாக அமைந்திருந்தது. 

இவர்களை தொடர்ந்து லபுசென் மற்றும் ஸ்மித் சிறிது நேரம் களத்தில் நின்று ரன்களை சேர்த்தனர். ஆனால் அவர்களால் இந்த இன்னிங்ஸை பெரிதாக எடுத்துச்செல்ல முடியவில்லை. இந்த கூட்டணி 30 ரன்கள் எடுத்த நிலையில் பிரிந்தது. லபுசென் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னரே டிரவிஸ் ஹெட்டும் ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த வெப்ஸ்டர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 

இந்த கூட்டணி 80 ரன்கள் சேர்த்தது. களத்தில் நிலைத்து நின்று இவர்கள் இருவருமே அரைசதத்தை பதிவு செய்தனர். ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும், வெப்ஸ்டர் 72 ரன்களும் எடுத்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக அலக்ஸ் கேரி 23 ரன்கள் சேர்த்திருந்தார்.  முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலிய அணி 212 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் ககிசோ ரபாடா 5 விக்கெட்களை கைப்பற்றினார். மார்கோ யான்சன் 3 விக்கெட்களையும், கேசவ் மகாராஜ் மற்றும் மார்க்ரம் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே எய்டன் மார்க்ரம் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து வியான் முல்டர் களத்திற்கு வந்து பந்து எதிர்கொண்டு வருகிறார். அவருடன் ரியான் ரிக்கில்டன் ரன்கள் சேர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை தென்னாப்பிரிக்கா அணி சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிங்க: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே இந்த பிளேயர் தான்

மேலும் படிங்க: ஆர்சிபி அணியில் இருந்து விலகுகிறாரா கோலி? என்ன பிரச்சனை?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.