கிளப் உலகக் கோப்பை கால்பந்து: இன்டர் மியாமி அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

மியாமி கார்டன்ஸ்,

32 அணிகள் பங்கேற்றுள்ள கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் இன்டர் மியாமி (அமெரிக்கா)-பால்மிராஸ் (பிரேசில்) அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. டாடோ ஆலென்டி (16-வது நிமிடம்), லூயிஸ் சுவாரஸ் (65-வது நிமிடம்) ஆகியோரின் கோலால் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் பால்மிராஸ் வீரர்கள் பாலின்ஹோ (80-வது நிமிடம்) மவுரிசியோ (87-வது நிமிடம்) ஆகியோர் அடித்த கோலால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு டிரா கண்டது.

இதே பிரிவில் நடந்த போர்டோ (போர்ச்சுகல்)-அல் அலி (எகிப்து) அணிகள் இடையிலான ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. லீக் முடிவில் பால்மிராஸ், இன்டர் மியாமி (தலா 5 புள்ளி) அணிகள் முறையே முதல் 2 இடங்களை பிடித்து நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு முன்னேறின.

நாக்-அவுட் சுற்றில் பால்மிராஸ் அணி, போடாபோகோவையும் (பிரேசில்), இன்டர் மியாமி, பாரீஸ் செயின்ட் ஜெர்மைனையும் (பிரான்ஸ்) எதிர்கொள்கிறது.

முன்னதாக ‘பி’ பிரிவில் நடந்த ஆட்டங்களில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணி 2-0 என்ற கோல் கணக்கில் சியட்டி சவுன்டெர்ஸ் எப்.சி.யையும் (அமெரிக்கா), அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) 1-0 என்ற கோல் கணக்கில் போடாபோகோவையும் (பிரேசில்) வீழ்த்தியது.

லீக் முடிவில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், போடாபோகோ, அட்லெட்டிகோ மாட்ரிட் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன், போடாபோகோ அணிகள் டாப்-2 இடங்களை உறுதி செய்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.