தோல்விக்கு யார் காரணம்? கவுதம் கம்பீர் கைகாட்டிய அந்த ஒரு வீரர்?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து உள்ளது. கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. இது கவுதம் கம்பீரின் தலைமையை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இந்தியா பக்கம் இருந்த இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து சிறப்பாக பேட்டிங் செய்து வென்றது. இந்நிலையில் போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கவுதம் கம்பீர், இந்த தோல்விக்கு எந்த ஒரு வீரரையும் தனிப்பட்ட முறையில் கைகாட்ட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: Ind vs Eng: இந்திய வரலாற்றில் மோசமான சாதனை.. அடுத்த போட்டியில் இந்த பவுலருக்கு இடமில்லை?

கவுதம் கம்பீர் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய கவுதம் கம்பீர், “எந்த ஒரு வீரருமே தங்களது முழுத் திறனை பயன்படுத்தவில்லை. சில நேரங்களில் வீரர்கள் தோல்வியடைகின்றனர், அது அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்க தான் செய்யும். இருப்பினும் அந்த சம்பந்தப்பட்ட வீரர் அதிகம் ஏமாற்றம் அடைகிறார். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியவில்லை என்பது அவர்களுக்கு தெரியும். முதல் இன்னிங்சில் 550 ரன்களுக்கு மேல் அடித்திருந்தால் இன்னும் இந்தியாவால் இங்கிலாந்துக்கு பிரஷர் கொடுத்திருக்க முடியும். அனைத்து வீரர்களும் சரியான முறையில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், இருப்பினும் சில சமயங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கும். இளம் வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் சிறந்த ஒரு வீரராக வர முடியும். இந்த போட்டியில் தோல்விக்கு ஒருவரை மட்டும் கை காட்ட விரும்பவில்லை, ஒட்டுமொத்த அணியாக சரியான முறையில் பங்களிக்கு தவறிவிட்டோம். நாங்கள் ஒன்றாக வெற்றி பெறுவோம். ஷர்துல் தாக்கூர் ஒரு வேகப்பந்துவீச்சாளர் இல்லை, அவர் ஒரு ஆல்ரவுண்டர். இந்த போட்டியில் குறைவாகவே பயன்படுத்தப்பட்டார். அதே சமயம் ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். ஐந்தாவது நாளில் ஷர்துல் தாக்கூர் இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் அவர் நன்றாக பந்து வீசினாரா இல்லையா என்று சொல்ல முடியாது. 

கடைசி நேரத்தில் இன்னும் சிறப்பாக பந்து வீசியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். சுப்மான் கில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார், ஒரு வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. ஆனாலும் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும், இது ஆரம்ப நாட்கள் தான். அவர் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இங்கிலாந்து போன்ற நாட்டில் கேப்டன்சி செய்வது மிகவும் சிரமமான ஒன்று. இது ஒருவரை ஆழ்கடலில் தள்ளுவது போன்றது. இருப்பினும் கில் அனைத்தையும் கற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிங்க: இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறேன் – முன்னாள் கேப்டன் அதிரடி அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.