ஐபிஎல் சீசனில் வைரலாகும் ரியாக்சன்கள்… மீம்ஸ் குறித்து மனம் திறந்த காவ்யா மாறன்

Kavya Maran: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரின் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், இங்கிலாந்தின் The Hundred தொடரில் Northern Superchargers உள்ளிட்ட அணிகளுக்கு இப்போது காவ்யா மாறன் உரிமையாளர் எனலாம். ஐபிஎல் தொடரில் 2016ஆம் ஆண்டுதான் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது. அதன்பின் 2024ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வந்தது. 

Kavya Maran: வைரலாகும் காவ்யா மாறன் ரியாக்சன்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான எஸ்ஆர்ஹெச் அணியில் டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளாசென், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, முகமது ஷமி என பலமான வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் 2025 சீசனின் ஆரம்பக் கட்டம் ஹைதராபாத் அணிக்கு உவப்பானதாக இல்லை, கடைசி 5 போட்டிகளில் 3 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் முடித்தது. SA20 தொடரை பொறுத்தவரை 3 சீசன்களில் முதல் 2 சீசன்களில் சாம்பியன்பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. 

ஐபிஎல் சீசன் வந்துவிட்டால் நிச்சயம் காவ்யா மாறனின் பெயரும் எப்போதும் டிரெண்டிங்கில்தான் இருக்கும் எனலாம். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடுகிறதோ இல்லையோ காவ்யா மாறன் குறித்த செய்திகளுக்கு மட்டும் பஞ்சம் இருக்காது. 

காவ்யா மாறன் ஹைதராபாத் பேட்டர் அடித்த சிக்ஸருக்கு கொடுத்த ரியாக்சன், ஹைதராபாத் பௌலர் எடுத்த விக்கெட்டுக்கு கொடுத்த ரியாக்சன், ஹைதராபாத் பேட்டர் அவுட்டாகும் போது கொடுத்த ரியாக்சன் என அவரின் ரியாக்சன் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வலம் வரும். சன்ரைசர்ஸ் விளையாடும் போட்டிகளை காவ்யா மாறன் நிச்சயம் நேரில் கண்டுகளிப்பார். அந்த போட்டி நடைபெறும்போது முக்கிய தருணங்களில் கேமரா காவ்யா மாறன் பக்கம் திரும்பாமல் இருக்கவே இருக்காது.

Kavya Maran: எங்கிருந்தாலும் கேமராமேன் கண்டுபிடித்துவிடுகிறார்கள்…

அந்த வகையில், InsideSport ஊடகம் ஒன்றுக்கு காவ்யா மாறன் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தன்னுடைய ரியாக்சன் மீம்ஸ்களாக மாறுவது குறித்து பேசுகையில், “(தொலைக்காட்சியில்) நீங்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் என்னுடைய உணர்ச்சிகள் எனலாம், நான் அங்கிருக்க வேண்டியது எனது வேலை ஆகும். ஹைதராபாத் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது, நான் அங்கேயே தான் உட்கார வேண்டும். நான் உட்காரக்கூடிய ஒரே இடம் அது மட்டும்தான். ஆனால், நான் அகமதாபாத் அல்லது சென்னைக்கு சென்று போட்டிகளை பார்த்தாலும், நான் தூரத்தில் பாக்ஸில் எங்காவது அமர்ந்திருந்தாலும் கேமராமேன் என்னை கண்டுபிடித்துவிடுகின்றனர். அதன்மூலம், அவை எப்படி மீம்ஸ்களாக மாறுகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. 

சன்ரைசர்ஸை அணியை பொறுத்தவரை, அது உண்மையிலேயே இதயத்திற்கு நெருக்கமானது. நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் முழுமையாக செலுத்தும்போது, ​​இயல்பாகவே அதன் வெற்றிகள் மற்றும் தோல்விகளுடன் நீங்கள் மிகவும் தனிப்பட்ட முறையில் பற்றுக் கொள்வீர்கள் என்று நான் நினைக்கிறேன்” என பேசி உள்ளார். காவ்யா மாறன், சன் நெட்வோர்க்கின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக இயக்குநர் ஆவார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.