திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை கோரும் இபிஎஸ்

சென்னை: “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும்.” என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த செய்திகளில், உச்சந்தலை முதல் கால்கள் வரை 18 காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மேலும், கழுத்துப் பகுதியில் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தம் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இது முழுக்க முழுக்க ஸ்டாலின் அரசின் காவல்துறை அராஜகத்தால் நடந்த கொலை.

ஸ்டாலின் ஆட்சியில் நடந்த 25 காவல் மரணங்களும் அப்பட்டமான மனித உரிமை மீறல். இதனை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முன்வந்து விசாரிக்க வேண்டும்.

இந்த நிலையில், அஜித்குமார் உயிரிழந்ததற்கு காரணம் “வலிப்பு” என FIR பதிவு செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. “Deja Vu” எல்லாம் இல்லை- விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது ஸ்டாலின் எந்த பச்சைப்பொய்யை சட்டப்பேரவையில் கூச்சமின்றி சொன்னாரோ, அதே பொய்யை அப்படியே அஜித்குமாருக்கு மீண்டும் சொல்கிறது ஸ்டாலினின் காவல்துறை.

நீங்கள் இப்படியெல்லாம் தில்லுமுல்லு செய்வீர்கள் எனத் தெரிந்து தான், எனது அறிவுறுத்தலின்படி, மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் #JusticeForAjithkumar பதாகைகளை ஏந்தி, நீதிக்கான குரலாக ஒலித்தனர்.

நாடு முழுக்க #JusticeForAjithkumar #NationWithAjith என பெரும் அதிர்வலைகளை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஸ்டாலின் எங்கே ஒளிந்துக் கொண்டிருக்கிறார்?

“ஆய்வுக் கூட்டம் நடத்துகிறோம்; CBCID-க்கு மாற்றுகிறோம்” என்ற உங்கள் நாடகங்களை சில ஊடகங்கள் நம்பலாம். மக்களும் சரி, நாங்களும் சரி- துளி கூட நம்பவில்லை! முதல்வரின் தறிகெட்ட ஆட்சியில் பாதுகாப்பின்றி தவிக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள். போலீஸின் போலி FIR மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கை CBI-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில் அளிக்க வேண்டும். வீடியோ ஷூட் செய்ய எவ்வளவு நேரம் ஆகும் ஸ்டாலின் அவர்களே? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.