இந்திய அணி திரும்ப திரும்ப செய்யும் தவறு… இந்த முறையும் இங்கிலாந்துக்கே வெற்றி – ஏன்?

India vs England Edgbaston Test: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று பர்கிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

IND vs ENG: இந்தியா செய்த பிளேயிங் லெவன் மாற்றம்

இங்கிலாந்து அணி (Team England) இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, இரண்டாவது போட்டிக்கும் அதே பிளேயிங் லெவனை களமிறங்கி இருக்கிறது. இங்கிலாந்து அணி இதை 2 நாள்களுக்கு முன்னரே அறிவித்துவிட்டது. இன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கடந்த போட்டியை போன்றே பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்திய அணியை (Team India) பொறுத்தவரை 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கருண் நாயர் நம்பர் 3 இடத்தில் இறங்கினார். நிதிஷ்குமார் ரெட்டி நம்பர் 6 இடத்தில் இறங்கினார். கடந்த போட்டியில் இந்திய அணியின் டெயிலெண்டர்கள் பேட்டிங்கில் பங்களிக்காத நிலையில், வாஷிங்டன் சுந்தரை நம்பர் 8இல் வைத்துள்ளது இந்திய அணி. 

IND vs ENG: 8 பேட்டர்கள், 6 பந்துவீச்சாளர்கள் 

நிதிஷ்குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் என 3 ஆல்-ரவுண்டர்களும்; முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் என 3 பிரதான பந்துவீச்சாளர்களும் என 6 பந்துவீச்சு ஆப்ஷன் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. அதில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் அடக்கம். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் நீண்ட வரிசை தேவை என்பதால் இந்தியா இந்த முடிவை எடுத்திருக்கிறது.

IND vs ENG: பெரிய தவறை செய்த இந்தியா

ஆனால், இந்தியா இதில்தான் பெரிய தவறை செய்திருக்கிறது எனலாம். நம்பர் 8இல் குல்தீப் யாதவை விளையாடியிருக்க வேண்டும். ஆடுகளம் 4ம் நாள் பிற்பாதியிலும், 5ம் நாள் முழுவதும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இந்த சூழலில் இரண்டு விரல் ஸ்பின்னர்களை வைத்து விக்கெட்டுகள் எடுப்பது கடினம். இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங்கிற்கு கடிவாளம் போடுவதற்கு குல்தீப் யாதவ் என்ற குதிரை நிச்சயம் தேவை. இந்த போட்டியிலும் இந்தியா அந்த தந்திரத்தை விட்டுள்ளது எனலாம். 

IND vs ENG: மோசமான நிலையில் இந்தியா

இந்தியா தற்போது முதலில் பேட்டிங் செய்து நல்ல நிலையில் விளையாடி வருகிறது. சுப்மான் கில் அரைசதம் கடந்து நிதிஷ்குமார் ரெட்டியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார். 62 ஓவரில் 212 ரன்களை இந்தியா கடந்திருக்கிறது, 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு… கேஎல் ராகுல் 2, கருண் நாயர் 31, ஜெய்ஸ்வால் 87, ரிஷப் பண்ட் 25, நிதிஷ் குமார் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இந்த முறையும் இந்தியா 300, 400 ரன்களை கூட முதல் இன்னிங்ஸில் அடிக்கலாம்.

IND vs ENG: பும்ரா இடத்தில் குல்தீப் வேண்டும் 

ஆனால், இந்தியா இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 20 விக்கெட்டுகளை எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும். இங்கிலாந்து அணி தொடர்ந்து பெரிய பெரிய இலக்குகளையும் அடித்துவிடுகிறது எனும்பட்சத்தில், விக்கெட் எடுக்கும் அனுபவம் கொண்ட பும்ராவும் இல்லாத நேரத்தில் குல்தீப் யாதவை (Kuldeep Yadav) எடுத்து வருவதே சரியான வியூகமாக இருந்திருக்கும். முன்னாள் இந்திய வீரர் அஸ்வினும் இதையேதான் பலமுறை தனது யூ-ட்யூப் சேனலிலும் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்தியா 400 ரன்களை இலக்காக வைத்து, ஒரே ஒரு நாள் (80-90 ஓவர்கள்) இங்கிலாந்துக்கு கொடுத்தாலும் அந்த அணி அதை அடிக்கவே பார்க்கும்.

IND vs ENG: இங்கிலாந்துக்கு் அதிக வெற்றி வாய்ப்பு

எனவே, 4வது இன்னிங்ஸில் மெதுவான ஆடுகளத்தில் தென்படும் கால்தடங்களை பயன்படுத்தி பந்தை திருப்பும் திறன் கொண்ட சுழற்பந்துவீச்சாளர் இருப்பது அவசியம். அதுவும் குல்தீப் யாதவ் இரண்டு பக்கமும் திருப்பக்கூடியவர். அவரை இந்த போட்டியிலும் உட்காரவைத்து இந்திய அணி பெரிய தவறை செய்திருக்கிறது. இதன்மூலம் 95% வெற்றி வாய்ப்பு இங்கிலாந்தின் பக்கமே இருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.