புதுச்சேரி,
புதுச்சேரியில் உள்ள 15 வயது சிறுமியின் ஆபாச புகைப்படம் அவரது தாயார் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களுக்கு சமூக வலைதளம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சிறுமியின் புகைப்படத்தை பதிவிட்டது மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரகாஷ் நாயக் (வயது 39) என்பதும் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததும் தெரியவந்தது. மேலும் அவர் புதுவையில் இருந்து தப்பிச்சென்று, ஒடிசாவில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் ஒடிசா சென்றனர்.
அங்கு பாலாசூர் பகுதியில் மறைந்திருந்த பிரகாஷ் நாயக்கை கைது செய்து, அவரது செல்போனை ஆய்வு செய்தனர். அதில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. இதுபற்றி அவரிடம் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
பிரகாஷ் நாயக், புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்தபோது, சமூக வலைதளங்களில் உள்ள பெண்களின் புகைப்படத்துக்கு லைக் போட்டு, வர்ணித்துள்ளார். இதை பார்த்து அவருடன் சாட்டிங் செய்யும் பெண்களை தொடர்பு கொண்டு, தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறி அந்த பெண்களிடம் பேசி அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளார்.
அதனை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, அதனை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் போலீசார் தேடுவதை அறிந்த பிரகாஷ் நாயக் புதுவையில் இருந்து தலைமறைவாகி ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.