புதிய குற்றவியல் சட்டங்கள் ‘குழப்பம் தரும் வீண் வேலை’ – ப.சிதம்பரம் முன்வைக்கும் காரணம்

புதுடெல்லி: ‘மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது வீண் வேலை. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இது குறித்து ப.சிதம்பரம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுதந்திரத்திற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தங்களே மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் என்று மத்திய அரசு பலமுறை கூறி வருகிறது. ஆனால் உண்மையிலிருந்து எதுவும் வெகு தொலைவில் இருக்க முடியாது. மூன்று மசோதாக்களை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு நான் ஓர் எதிர்ப்புக் குறிப்பை அனுப்பியிருந்தேன். அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் ஒரு பகுதியாகும்.

ஐபிசி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியச் சட்டத்துடன் புதிய மசோதாக்களை பிரிவு வாரியாக ஒப்பிட்டுப் பார்த்த பிறகு, எனது கருத்துக் குறிப்பில், நான் பின்வருமாறு வலியுறுத்தினேன்:

1. ஐபிசியின் 90-95%, 2. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 95% மற்றும் 3. சாட்சியச் சட்டத்தின் 99% புதிய மசோதாவில் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன என்றேன். எனது இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்திலோ அல்லது வேறு இடத்திலோ யாரும் மறுக்கவில்லை.

புதிய குற்றவியல் சட்டங்கள், பெருமளவில் ‘வெட்டி ஒட்டும்’ பயிற்சியாகவே இருந்தது. புதிய சட்டத்தில் சில புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் சில ஏற்றுக் கொள்ளத்தக்கவை, சில ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்த முழு நடைமுறையும் வீணானது. இந்த புதிய சட்டங்கள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் காவல் துறையினரிடையே நீதி நிர்வாகத்தில் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்தார்

முன்னதாக, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியது சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய சீர்திருத்தம் என்றும், இச்சட்டங்கள் நீதித்துறை செயல்முறையை எளிதில் அணுகக் கூடியதாக மட்டுமல்லாமல், எளிமையானதாகவும், கால நிர்ணயத்தோடும், வெளிப்படையானதாகவும் மாற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் நடைமுறையில் இருந்த ஐபிசி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) மற்றும் இந்திய சாட்சியச் சட்டங்களை மாற்றியமைத்து, புதிய சட்டங்களான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) மற்றும் பாரதிய சாக்‌ஷய ஆதினியம் (பிஎஸ்ஏ) சட்டங்கள் 2024-ம் ஆண்டு ஜூலை 1 அன்று நடைமுறைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.