மும்பையில் உள்ள பிரபலமான ஆங்கில மீடிய பள்ளியில் 40 வயது ஆசிரியை ஆங்கிலம் கற்பித்து வந்தார். இதே பள்ளியில் 11 வகுப்பு படிக்கும் 16 வயது மாணவனைக் கட்டாயப்படுத்தி நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவன் 11வது வகுப்பு படித்தபோது அவனது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதைக் கண்காணித்த அவனது பெற்றோர் மாணவனிடம் தீவிரமாக விசாரித்தபோது நடந்த உண்மையைத் தெரிவித்தான்.
தனது பள்ளி ஆசிரியை தன்னை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்தான். ஆனால் உடனே அவனது பெற்றோர் இது குறித்து போலீஸில் தெரிவிக்கவில்லை.
இது குறித்து பிரச்னையைக் கிளப்பினால் மாணவனின் 12வது வகுப்புத் தேர்வு பாதிக்கப்படும் என்று அமைதியாக இருந்தனர். மாணவரும் அந்த ஆசிரியையை அடிக்கடி தவிர்க்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் 12வது வகுப்புத் தேர்வு முடித்துவிட்டு வெளியில் வந்த மாணவனை ஆசிரியைத் தனது வீட்டு வேலைக்கார பெண்ணை அனுப்பி, அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மாணவனின் பெற்றோருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்தே இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டுச் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அந்த ஆசிரியையிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ”சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. 2023ம் ஆண்டு பள்ளி ஆண்டு விழாவிற்காக மாணவர்களை நடன நிகழ்ச்சிக்குத் தயார் செய்தபோது சம்பந்தப்பட்ட மாணவனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஆசிரியைக்கு ஏற்பட்டது.
இதில் மாணவன் மீது கவரப்பட்ட ஆசிரியைக் கடந்த ஆண்டிலிருந்து அவனைத் தனது பக்கம் இழுக்க முயற்சி செய்து வந்தார். ஆனால் மாணவன் அந்த ஆசிரியையைக் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

இதையடுத்து அந்த ஆசிரியைத் தனது தோழி ஒருவரின் உதவியை இதற்காக நாடினார். ஆசிரியையின் தோழி பள்ளியில் வேலை செய்யவில்லை. சம்பந்தப்பட்ட தோழி மாணவனைத் தனிப்பட்ட முறையில் அணுகினார்.
அம்மாணவனிடம் வயதான பெண்கள் வயது குறைந்த வாலிபர்களுடன் நட்பு வைத்துக்கொள்வது சகஜம் என்றும், ஆசிரியைக்கும், உனக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்றும் கூறி மாணவனின் மனதை மாற்றினார். அதன் பிறகே மாணவன் சம்பந்தப்பட்ட ஆசிரியையைச் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தான்.
இதையடுத்து ஆசிரியை அந்த மாணவனைத் தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று ஆடைகளைக் கழற்ற வைத்து பாலியல் உறவு வைத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மாணவன் பதட்டமாக இருந்தான்.
இதனால் பதட்டத்தைத் தனிக்க மாணவனுக்கு ஆசிரியைச் சில மாத்திரைகளை வாங்கி கொடுத்துச் சாப்பிடும்படி கேட்டுக்கொண்டார்.
அதோடு மாணவனை அடிக்கடி வெளியில் காரில் அழைத்துச் சென்று, அவனை மது அருந்தச் செய்து தென்மும்பை மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

ஆசிரியைக் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவனை அழைத்துச் செல்ல ஆசிரியைப் பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவனை மடக்க ஆசிரியைக்கு உதவி செய்த அவரது தோழி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.