“அனாதை பிணம் போல கெடக்கட்டும்..'' – வெடி விபத்தில் நிவாரணம் கேட்டு போராடிய மக்களை மிரட்டிய எஸ்பி

சர்ச்சையான எஸ்.பி பேச்சு

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு படி ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை கேட்டு போராடியவர்களை பார்த்து, மாவட்ட எஸ்.பி கண்ணன் மிரட்டும் தொனியில் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

வெடி விபத்தில் 9 பேர் பலி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தாலுகா, சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கமல் குமார் என்பவருக்கு சொந்தமான கோகுலேஸ் பட்டாசு ஆலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் மருந்து கலவை செய்யும் அறையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தினால் ஆலையில் உள்ள 8 அறைகள் வெடித்து தரைமட்டமானது.

வெடி விபத்தில் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக சிவகாசி, விருதுநகர், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் 7 பேரின் உடல்கள் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவரின் உடல் சிவகாசி வைக்கப்பட்டது. இதில் சிவகாசியில் வைக்கப்பட்ட உடலும், விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்ட மூன்று பேரின் உடலையும் உறவினர்கள் பெற்றுச் சென்று விட்டனர்.

விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

நிவாரணம் கேட்டு போராட்டம்

வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் தலா நான்கு லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பில் இருந்து, 5 லட்சம் ரூபாயும் ஈமக்காரியங்களுக்காக்க 50,000 ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பணம் அவர்களது குடும்பத்திற்கு போதாது “உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, உயிரிழந்தவர்களுக்கு தொழிற்சாலை உரிமையாளர்கள் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என நேற்றிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்கள், தொழிற்சங்கங்கள், சாதிய அமைப்புகள் இணைந்து போராட்டங்களையும் பல கட்ட பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளவர்களின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோட்டாட்சியர் சிவகுமார், “மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு எல்லா ஒத்துழைப்பையும் வழங்கும். சாலை மறியலை கைவிடுங்கள்” என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது மறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டத் தொடங்கினார். “போலீஸ் இவங்கள ரவுண்டப் பண்ணுங்க, எல்லாத்தையும் கைது பண்ணுங்க” என மிரட்டத் துவங்கினர்.

அப்போது, “ரூ.10 லட்சம் உரிமையாளர் தரப்பில் இருந்து தரவேண்டும் என நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது” என பலர் எடுத்துக் கூறினர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை

ஆனால், அதை அவர் காதில் வாங்கவில்லை. எந்த பேப்பரில் வந்துள்ளது என எதிர்கேள்வி கேட்டாவாரே, மறியல் செய்வது சட்ட விரோதம் என மீண்டும் மிரட்டல் விட்டார்.

அப்போது போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்கள் கோட்டாட்சியர் சிவகுமாரிடம் பேசிய விபரங்களை கூறினர். ஆனாலும், அவர் அதில் கவனம் செலுத்தவில்லை. பிடிவாதமாக `அனைவரும் உள்ளே செல்லுங்கள்’ என தெரிவித்தார். இதையடுத்து, அனைவரும் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றனர்.

“எந்த நிவாரணமும் கிடைக்கக் கூடாது..” – எஸ்.பி

அப்போது வெளியே நின்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், “இவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கக் கூடாது. எங்களை வைத்து பஞ்சாயத்து பண்ணி பணத்தை வாங்க பார்க்கிறாங்களா? அனாதைப் பொனம் போல இங்கேய பாடியெல்லாம் கெடக்கட்டும். அப்பதான் இவங்களுக்கு புத்தி வரும். இவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கக் கூடாது” என கோட்டாட்சியரிடம் கோபத்துடன் தெரிவித்தார்.

மேலும், `50 பேர் மேல் ஐடன்டிபிகேசனோடு வழக்கு போடுங்கள்’ எனவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனித்தனியா சந்தித்து ஒங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். பாடிய வாங்கிக்கங்க எனவும் மிரட்டிப் பணிய வைத்துப் பார்த்தார்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை

அப்போது உறவினர்களை பார்த்து “ஒழுங்கா இருந்துக்கணும் கோஷம் போடுற வேலை எல்லாம் வச்சுக்கிட்டீங்கன்னா வேற மாதிரி ஆகிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்” என மீண்டும் மிரட்டினார்.

அப்போது உறவினர்கள் சார் `சுட்டுவிங்களா? சுடுங்க, நாங்க சட்டபடி நிவாரண தொகையை வாங்காமல் உடல்களை பெற மாட்டோம்’ என உறுதியாக இருந்தனர்.

அஜித் குமார் லாக்கப் மரணம் நிகழ்ந்த சுவடு கூட இன்னும் மறையவில்லை. நீதிமன்றம் காவல்துறை ஒழுக்கத்துடன் நடந்துகொள்ளுங்கள், மக்களிடம் கண்ணியமாக பேசுங்கள் என சரமாரி கேள்விகளை எழுப்பியது. மேலும் ஏடிஜிபி டேவிட்சன் பொதுமக்களுடன் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள அறிவுறுத்தியிருந்தார். ஆனால் விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணனின் இந்த மிரட்டும் தொனி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.