பா.ஜ.க-விற்குத் தேசியத் தலைவர் தேர்தல் நடத்துவது தொடர்ந்து தாமதமாகிக்கொண்டே வருகிறது. ஏற்கெனவே பா.ஜ.க-விற்கு 28 மாநிலங்களில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய மாநிலத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.
பா.ஜ.க தேசியத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் 19 மாநில பா.ஜ.க தலைவர்கள் தேவை. தற்போது 28 மாநிலத்திற்குத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதால் புதிய தேசியத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று தெரிகிறது.
ஆனால் உத்தரப்பிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற முக்கியமான மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்ட பிறகுதான் தேசியத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தற்போது 9 மாநில பா.ஜ.க தலைவர்கள் பட்டியலைக் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறது. புதுச்சேரி பா.ஜ.க தலைவராக வி.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்திற்குப் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரிக்கும் புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவராக ரவீந்திர சவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் நான்கு முறை எம்.எல்.ஏ.வாகவும், மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். அதோடு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து மாநில பா.ஜ.க செயல் தலைவராகவும், முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இருக்கிறார்.
மத்தியப்பிரதேச பா.ஜ.க தலைவராக ஹேமந்த் கண்டேல்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாநில முதல்வர் மோகன் யாதவிற்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மகேந்திர பட் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ராஜீவ் பிந்தால் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 5 முறை எம்.எல்.ஏவாக இருக்கும் ராஜீவ் பிந்தால் மூன்றாவது முறையாக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அமைச்சராகவும், சபாநாயகராகவும் ராஜீவ் செயல்பட்டு இருக்கிறார். ஆந்திராவிற்குப் புதிய தலைவராக வி.என். மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானாவிற்கு ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.