சென்னை: நீட் தேர்வின்போது மின்தடை ஏற்பட்டதால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அன்று சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, தங்களால் சரியாக தேர்வு எழுத முடியாததால், மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 பேர், பிற மையங்களில் தேர்வு எழுதிய 3 பேர் என மொத்தம் 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை தரப்பில், ‘மின்தடை ஏற்பட்டாலும், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலான மாணவர்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர். மறுதேர்வு நடத்தினால், நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், மறுதேர்வு நடத்துவது சாத்தியமற்றது’’ என்று கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, 16 மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை தரப்பில், ‘வழக்கு தொடர்ந்த பெரும்பாலான மாணவர்கள் 180 கேள்விகளுக்கு100 கேள்விகளுக்கு மேல் பதில் அளித்துள்ளனர். ஒரு மாணவர் 179 கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். மின்தடையால் இந்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள், ‘‘நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக நிரூபிக்காத வரை மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது மற்ற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்ற தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது’’ என்று தீர்ப்பளித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.