நடிகை ரேவதி இயக்கத்தில் ப்ரியாமணி, ஆரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் சீரிஸ் ‘குட் வைஃப்’. ‘தி குட் வைஃப்’ எனப்படும் ஆங்கில வெப் சீரிஸின் ரீமேக்காக இதை எடுத்திருக்கிறார்கள்.
ஜூலை 4-ம் தேதி இந்த சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

அதையொட்டி, இந்த சீரிஸின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, சீரிஸ் தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
ப்ரியாமணி பேசுகையில், “ஓ.டி.டி சீரிஸ்கள், திரைப்படங்கள் என அனைத்துமே நமக்கு ஒரு தளம்தான். எந்த வாய்ப்பையும் விட்டுவிடாதீர்கள். அந்த வாய்ப்புகள் உங்களை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுசெல்லலாம்.
இந்தச் சீரிஸில் வரும் என்னுடைய தருணிக்கா கதாபாத்திரத்தின் வாழ்க்கை, ஒரு சூழலில் வேறொரு பக்கத்திற்கு மாறிவிடும். அதுபோல, அவளைச் சுற்றி இருப்பவர்களின் வாழ்க்கையும் மாற்றமடையும்.
அதற்குப் பிறகு கிடைக்கும் ஒரு வாய்ப்பை வைத்து, தொடக்கத்திலிருந்து தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பர்சனல் மற்றும் பணி சார்ந்த பக்கத்தில் எப்படி வெற்றி பெறுகிறாள் என்பதுதான் இந்த சீரிஸின் கதை. இந்த சீரிஸின் ஒரிஜினல் வெர்ஷனை நான் பார்த்ததில்லை.

நான் எப்போதுமே நடிப்பிற்காக ஹோம்வொர்க் செய்வதில்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு, அங்கு சொல்லப்படும் விஷயங்களைக் கவனித்து நடிப்பேன்.
அதுவும் இதுவரை க்ளிக் ஆகியிருக்கிறது. நான் நான்காவது முறையாக வழக்கறிஞராக நடிக்கிறேன். நானும் நடிகர் சம்பத்தும் இணைந்து இதுவரை ‘பருத்திவீரன்’ படத்தில் மட்டுமே நடித்திருப்பதாக நினைத்திருந்தேன்.
ஆனால், நானும் அவரும் இணைந்து நான்கு படங்களுக்கு நடித்திருக்கிறோம். மற்ற படங்களில் எங்களுக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை. இந்த சீரிஸில் இணைந்து நடித்திருக்கிறோம். நடிகர் ஆரியும் நானும் ஏற்கெனவே ஒரு சீரிஸில் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது. இப்போது அது நடந்திருக்கிறது.” என்றார்.