விராட் கோலி ரெக்கார்டை தகர்த்த சுப்மன் கில் – அடி தூள்

Shubman Gill : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் வெகு சிறப்பாக விளையாடி 269 ரன்கள் குவித்தார். அத்துடன் பல சாதனைகளையும் இந்திய பிளேயராக இங்கிலாந்து மண்ணில் படைத்தார். அதில் ஒன்று விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது 254 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்தார்.

2019 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்த ஸ்கோரை அவர் எடுத்திருந்தார். அதனால், அப்போது இந்திய டெஸ்ட் கேப்டன் ஒருவர் எடுத்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியிருந்தது. இப்போது அதனை முறியடித்திருக்கிறார் சுப்மன் கில். அதுவும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ஏற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே விராட் கோலியின் சாதனையை முறியடித்து இந்த சாதனையை அவர் படைத்திருகிறார். அதுமட்டுமல்லாமல், சுப்மன் கில்லின் சிறப்பான இன்னிங்ஸ் மூலம் இந்திய அணி முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் 500 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறது. இதற்கு முன்பு ஒருமுறைகூட இங்கிலாந்து அணிக்கு எதிராக அந்நாட்டில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 500 ரன்கள் எடுத்ததில்லை. இப்போது இந்த சாதனையும் கேபட்ன் சுப்மன் கில் வசம் வந்திருக்கிறது.

இதுகுறித்து பேசிய கேப்டன் சுப்மன் கில், இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். மீண்டும் நன்றாக பேட்டிங் விளையாடி, அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை பெற்றிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு என்னுடைய பேட்டிங்கை அனுபவித்து விளையாடினேன். முன்பு 30,40 ரன்கள் மட்டுமே டெஸ்டில் எடுத்து வந்தேன். அது எனக்கு திருப்தி கொடுக்கவில்லை. பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக முயற்சி செய்த ஒன்று. ரெட் பாலில் இப்போது கிளிக் ஆகி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

முதலில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் எண்ணத்தில் இப்போட்டியில் ஆடவில்லை. என்னுடைய பேட்டிங்கை ரசித்து விளையாட வேண்டும் என்ற எண்ணத்துடன் விளையாடினேன், அது நல்ல ரிசல்ட் கொடுத்திருக்கிறது. நானும் களத்தில் மகிழ்சியோடு விளையாடினேன் என சுப்மன் கில், 2ம் நாள் ஆட்டநேர முடிவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய சுப்மன் கில், ஹெட்ங்லியில் நான் 147 ரன்கள் எடுத்தது நம்பிக்கை கொடுத்தது. அதேநேரத்தில் நான் அவுட்டானால் பின்வரிசை பேட்டிங் சீக்கிரம் சரிய வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் முடிந்தளவுக்கு களத்தில் இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். அதனால், அதிக நேரம் கிரீஸில் இருக்குமாறு பார்த்து விளையாடினேன் எனவும் கூறினார். 

தற்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. 2ம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.