பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளாவில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து, 14 பேரை கைது செய்தனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகள் 6 பேர் தலைமறைவாக இருந்ததால் அவர்களை தேடி வந்தனர். கர்நாடகா மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள விமான நிலையத்தில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை கைது செய்தனர்.
14 பேரிடம் விசாரணை: தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, ”பிரவீன் நெட்டூரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 6 பேரை தேடி வந்தோம். அவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.4 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்து இருந்தோம்.
இந்த வழக்கில் நேரடியாக தொடர்புடைய அப்துல் ரஹ்மான் கத்தாரில் தலைமறைவாக இருந்தார். வியாழக்கிழமை இரவு அவர் நாடு திரும்புவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கண்ணூர் விமான நிலையத்தில் அப்துல் ரஹ்மானை கைது செய்திருக்கிறோம்.
அவரை காவலில் எடுத்து விசாரித்து, இன்னும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகள் 5 பேரை பிடிக்க முயற்சி மேற்கொள்வோம். அவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. சர்வதேச போலீஸாரின் உதவியுடன் பிடிக்க முயற்சித்து வருகிறோம்” என தெரிவித்தனர்.