பியூனோஸ் அயர்ஸ்,
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிலையில், டிரினிடாட் அண்டு டுபாகோ நாட்டில் பிரதமர் மோடியின் பயணம் நிறைவடைந்ததும், அவர் அர்ஜென்டினாவுக்கு புறப்பட்டு சென்றார்.
அர்ஜென்டினாவில் 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் எஜீஜா சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை சென்றிறங்கியதும் பாரம்பரிய முறைப்படி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் அவர் தங்க இருக்கும் ஓட்டலுக்கு சென்றபோது, மோடி மோடி என்றும் பாரத் மாதா கி ஜெய் என்றும் இந்திய வம்சாவளியினர் கோஷங்களை எழுப்பினர். அவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். அவரை வரவேற்கும் வகையில் கலாசார நடனம் ஒன்றும் நடத்தப்பட்டது.
57 ஆண்டுகளில் இந்திய பிரதமரின் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும். அவருடைய வருகையை முன்னிட்டு, இந்திய சமூகத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர் என மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
இந்த பயணத்திற்கு பின்னர், பிரேசில் நாட்டில் நடைபெற உள்ள 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அந்நாட்டுக்கு செல்வார். இதன்பின்னர், இறுதியாக நமீபியா நாட்டுக்கு அவர் பயணம் மேற்கொள்வார்.