மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தோர் நகரைச் சேர்ந்தவர் குர்தீப் கவுர். விழித்திறன், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் சவால் கொண்ட இவர், வருமான வரித்துறையில் அரசு உத்தியோகம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ‘இந்தூரின் ஹெலன் கெல்லர்’ என பரவலாக அறியப்படும் 39 வயது குர்தீப், தீவிர முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் அரசுப் பணியில் இணையும் தனது இலட்சியத்தை சாத்தியமாக்கியுள்ளார்.

12-ம் வகுப்பு வரை படித்துள்ள குர்தீப், இந்தூரிலுள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில் நான்காம் நிலை ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பின் கீழ், குர்தீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குர்தீப்பின் சிறந்த செயல்பாடு குறித்து பேசிய வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் சப்னா பங்கஜ் சோலங்கி, “குர்தீப் தனது பணியை முழு அர்ப்பணிப்போடு கற்றுக்கொள்கிறார். அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வருகிறார்” எனக் கூறியுள்ளார்.
மகளின் சாதனை குறித்து மகிழ்வாக பேசிய அவருடைய அம்மா மஞ்சித் கவுர் வாசு, “எங்கள் குடும்பத்தில் அரசுப்பணியை முதன்முதலில் பெற்று சாதனை படைத்திருக்கிறாள் என் மகள். அவள் இப்படியொரு சிறந்த நிலைக்கு முன்னேறுவாள் என நான் நினைத்துப் பார்த்ததில்லை. இப்போது என்னை அறிந்தவர்களைவிட, குர்தீப்பின் தாயாக என்னை அறிந்தவர்களே அதிகம்” என மகளின் வெற்றி குறித்து நெகிழ்ந்துபோய் பேசியிருக்கிறார்.

தவிர, “குர்தீப் குறைப்பிரசவத்தில் பிறந்ததால், கிட்டத்தட்ட பிறந்து இரண்டு மாதங்கள் வரைக்கும் மருத்துவமனையிலேயே இருந்தாள். அவள் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, அவளைத் தொட்டாலும், சத்தம் எழுப்பினாலும் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அதன்பிறகு தான், என் மகளுக்கு விழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் சவால்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்கிறார் குர்தீப்பின் அம்மா.
குர்தீப்பின் சாதனை குறித்து பேசிய சமூக ஆர்வலர் ஞானேந்திர புரோகித், “இந்தியாவில் பேச்சுத்திறன், செவித்திறன் மற்றும் விழித்திறன் சவால் கொண்ட பெண் அரசு உத்தியோகம் பெறுவது இதுவே முதல் முறை. இவருடைய சாதனை, மாற்றுத்திறனாளி சமூகத்தினர் மனதில் நிச்சயம் உத்வேகத்தை ஏற்படுத்தும். குர்தீப் போல உடலில் சவால்களை கொண்டோர், அவை இயலாமை அல்ல என நிரூபித்து வருகின்றனர். உடலில் சவால்கள் இருந்தாலும் எதையும் செய்ய இயலும் என காண்பிக்கின்றனர். அவர்களுக்கு தேவை திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு மட்டுமே. அரசுப்பணியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசு சட்டங்கள் அமைத்து வைத்திருந்தாலும் அந்த சட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவது சவாலாகவே உள்ளது” என பேசியிருந்தார்.
அவள் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது, அவளைத் தொட்டாலும், சத்தம் எழுப்பினாலும் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. அதன்பிறகு தான், என் மகளுக்கு விழித்திறன், பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் சவால்கள் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்”
அரசுப்பணி பெற்ற குர்தீப், தனது கைகளையும் விரல்களையும் மெதுவாக அழுத்தி தொட்டுணரக்கூடிய சைகை மொழி மூலம் மகிழ்வைப் பகிர்ந்தார். குர்தீப்பின் சைகை மொழியை அவருடைய ஆசிரியர் மோனிகா புரோகித், ’நான் மிக மிக மகிழ்வாக உள்ளேன் என்கிறார் குர்தீர்’ என மொழிப்பெயர்த்தார்.
வாழ்த்துகள் குர்தீப் கவுர்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…