இந்திய அணியின் அடுத்த சர்பிராஸ் கான் இவரா? அடுத்த டெஸ்டில் வாய்ப்பில்லை

Karun Nair : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணி 608 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெற்றிக்கு நிர்ணயித்துள்ளது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 5வது நாள் ஆட்டம் நடக்கிறது. இப்போட்டியை டிரா செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணியும் விளையாடுகின்றன. 

இந்த சூழலில் அடுத்த டெஸ்ட் போட்டியில், அதாவது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியிலும் பேட்டிங்கில் சோபிக்காத அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸிலும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. அதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த அவர், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இங்கிலாந்து கவுண்டி போட்டிகள் மற்றும் இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சதமடித்ததால் கருண் நாயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், ரவீந்திர ஜடேஜா பேட்டிங் ஆடும் அளவுக்கு கூட கருண் நாயர் பேட்டில் இருந்து இன்னும் நல்ல ஸ்கோர் வரவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா? அல்லது இன்னும் ஒரு வாய்ப்பை சுப்மன் கில், கவுதம் கம்பீர் ஆகியோர் அவருக்கு கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. சாய் சுதர்சனுக்கு முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால்,  அவர் அதில் ஒழுங்காக விளையாடவில்லை என்பதால் உடனடியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இப்போது அதே இடத்தில் கருண் நாயர் சொதப்பிக் கொண்டிருக்கிறார். இப்படி தான் இந்திய அணியில் விளையாட சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எல்லாம் இடம்பிடித்தார். ஆனால், தொடர்ச்சியாக ரன்கள் அடிக்க தவறியதால் இப்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் இடம்பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். அவரைப் போலவே கருண் நாயர் சொதப்பிக் கொண்டிருக்கிறார். சர்பிராஸ் கானுக்கு இன்னும் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. கருண் நாயர் இம்முறை இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டால், இனி இடம்பிடிப்பது கடினம். காலம் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்குமா? என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.