லண்டன்,
தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளரான சாய் கிஷோர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி சாய் கிஷோர் இங்கிலாந்தை சேர்ந்த சர்ரே கவுண்டி அணிக்காக விளையாட உள்ளார். அதில் அவர் சர்ரே அணிக்காக அடுத்த இரு கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் களம் காண உள்ளார்.
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் போன்ற தமிழக வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சாய் கிஷோரும் விளையாட உள்ளார்.
திறமை வாய்ந்த வீரரான சாய் கிஷோர் ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணிக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி உள்ளூர் தொடர்களிலும் கவனம் ஈர்த்து வருகிறார். அதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அண்மையில் முடிவடைந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இவரது தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.