மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் ‘டிக்ளேர்’ செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். அத்துடன் அவரது கேப்டன்சியும் சிறப்பாக உள்ளதாக பாராட்டும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
“ஒரு கேப்டனின் சிறந்த செயல்பாடு. சுப்மன் கில் கேப்டன்சிக்கு 10க்கு 10 மார்க் கொடுக்கலாம். ஒரு கேப்டனிடமிருந்து இதைவிட வேறு எதையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. நீங்கள் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் கீழே இருந்த போது அவர் பிராட்மேன் போல பேட்டிங் செய்து 269 மற்றும் 161 ரன்கள் அடித்தார். இறுதியில் நீங்கள் ஆட்டத்தை வென்றீர்கள்.
முதல் டெஸ்ட் போட்டியில் அவரது கேப்டன்சி மிகவும் எதிர்வினையாற்றியது. ஆனால் அடுத்த போட்டியில் அவர் மிகவும் முன்னேற்றத்துடன் செயல்படுகிறார். அத்துடன் இங்கிலாந்து மண்ணில் அவர்களது வீரர்களை திணறடிக்க கூடிய ஆகாஷ் தீப் போன்றவரை தேர்ந்தெடுத்ததன் மூலம் சிறந்த வேகப்பந்து வீச்சாளரை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள்” என்று கூறினார்.