பாண்டிச்சேரி பிரிமியர் லீக்: யானம் ராயல்ஸ் அணிக்கு முதல் வெற்றி… புள்ளிப்பட்டியலில் யார் டாப்?

Pondicherry Premier League Season 2: பாண்டிச்சேரி பிரிமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் கடந்த ஜூலை 6ஆம் தேதி பாண்டிச்சேரி சீகெம் மைதானத்தில் கோலாகலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 6 அணிகள் மோதும் இந்த தொடரில் அனைத்து போட்டிகளும் இந்த மைதானத்திலேயே நடைபெறுகின்றன. மதியம் 2 மணிக்கும், மாலை 6 மணிக்கும் என தினமும் 2 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 18ஆம் தேதி மட்டும் ஒரே ஒரு லீக் போட்டி நடைபெறுகிறது. ஜூலை 27ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

PPL 2: பரத்வாஜ் அட்டகாசம்

அந்த வகையில், PPL தொடரில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பிரவின் (6), பரமேஷ்வரன் (5) அடுத்தடுத்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் அணியின் கேப்டன் தருண் 19 ரன்களும், அதித்யா 11 ரன்கள் எடுத்தனர். ஆனாலும், அட்டகாசமாக ஆடிய வேதாந்த் பரத்வாஜ் 62 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து வெளியேறினார். அதில் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் அடக்கம். மாஹே மெகலோ தரப்பில் திவாகர் கோபால் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

PPL 2: போராடிய அக்‌ஷந்த்

இதனையடுத்து 165 ரன்கள் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டத்தால் முதல் 6 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே கிடைத்தது.

ஒரு பக்கம் அக்‌ஷந்த் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 31 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த அக்‌ஷந்த் 35 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் என 46 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

PPL 2: ஆட்டநாயகன் பரத்வாஜ்

இறுதியில், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. ஜெனித் யானம் ராயல்ஸ் தரப்பில் பரத் வாகணி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜெனித் யானம் ராயல்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. வேதாந்த் பரத்வாஜ் ஆட்டநாயகனாக தேர்வானார்.

ShriramCapitalPPL #PPL2025 #PondicherryPremierLeague #PondicherryCricket pic.twitter.com/zEInhjsBRp

— Pondicherry Premier League (@PPLT20_Cricket) July 8, 2025

PPL 2: நாளைய போட்டிகள்?

முன்னதாக இன்று மதியம் நடைபெற்ற போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை மதியம் வைட் டவுண் ஜெயின்ட்ஸ் – யானம் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மாலையில், ஒசுடு அக்கார்ட் வாரியர்ஸ் – காரைக்கால் நைட்ஸ் அணிகள் மோதின.

PPL 2: புள்ளிப்பட்டியில் யார் முதலிடம்?

இதுவரை 5 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், வில்லியனூர் அணி 2 போட்டிகளிலும் வென்று முதலிடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ந்து, மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ், வைட் டவுண் ஜெயின்ட்ஸ், யானம் ராயல்ஸ் அணிகள் தலா 1 வெற்றி, 1 தோல்வியுடன் முறையே 2, 3, 4வது இடத்தில் உள்ளன. ஒசுடு அக்கார்ட் வாரியர் மற்றும் காரைக்கால் நைட்ஸ் ஒரு போட்டியை கூட ஜெயிக்காமல் முறையே 5, 6வது இடத்தில் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.