ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. ஒரே மாதத்தில் இவருடைய மொபைல் போன், மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் ஆகியவை அடுத்தடுத்து திருட்டு போயுள்ளன.
முதல் சம்பவம் கடந்த ஜூன் 11-ந்தேதி நடந்தது. தவுசா நகரில் நடந்த முன்னாள் மத்திய மந்திரி ராஜேஷ் பைலட்டின் நினைவு தின நிகழ்ச்சியின்போது இவருடைய மொபைல் போன் திருட்டு போனது. இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்பின்னர், அவருடைய வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.
இந்த சம்பவம்பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான தீன் தயாள் செய்தியாளர்களிடம் கூறும்போது, வீட்டின் முன்புறம் இருந்த சி.சி.டி.வி. கேமரா வேலை செய்யவில்லை. மற்றொரு கேமரா காட்சியை படம் பிடிக்கவில்லை என கூறியுள்ளார். இதன்பின்னர், டிராக்டர் ஒன்றும் திருடு போனது.
இதுபற்றி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான டிகா ராம் ஜல்லி கூறும்போது, எம்.எல்.ஏ.க்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. கொள்ளையர்கள், திருட்டு கும்பல்கள், மாபியாக்கள் அச்சமின்றி வலம் வருகின்றனர். காவல் நிர்வாகம் தொடர்ந்து அமைதியாக இருக்கிறது. முதல்-மந்திரி பஜன்லாலின் கையில் உள்துறை உள்ளது. அப்போதுகூட இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன என கூறியுள்ளார்.