ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (ஜூலை 08) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. லோகேஷ் பிரபாகரன் (2), ஆகாஷ் கார்கவே (5), நெயன் காங்கேயன் (20), வந்தித் ஜோஷி (3), பழனிசாமி பன்னீர்செல்வம் (0), ஆனந்த் பயஸ் (10) என அடுத்தடுத்து வெளியேற 10 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
இதனைத்தொடர்ந்து களம் புகுந்த அஸ்வின் தாஸ் அதிரடியாக ஆடினார். மேலும், 43 பந்துகளில் (5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) 64 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். வில்லியனூர் அணி தரப்பில், புனித் தத்தே 3 விக்கெட்டுகளையும், சமர் கான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வில்லியனூர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றிவாகை சூடியது. மேலும், தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளையும் வில்லியனூர் அணி பதிவு செய்துள்ளது. அந்த அணியில், அற்புதமாக ஆடிய பி.ஆகாஷ் 34 பந்துகளில் (7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) 72 ரன்கள் எடுத்தார். அவரே ஆட்டநாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ், “தொடர்ச்சியாக இரண்டு வெற்றிகளை பதிவுசெய்தது மகிழ்ச்சியாக உள்ளது. முதலில் பேட்டிங்கிற்கு கடினமாக இருந்தது. இரண்டாவது பகுதியில் பேட்டிங் செய்வதற்கு எளிமையாக இருந்ததால், 137 ரன்களை சேசிங் செய்ய முடிந்தது” என்றார். மேலும், பாண்டிச்சேரி பிரிமியர் லீக் குறித்து பேசிய ஆகாஷ், “என்னைப் போன்ற இளைஞர்களை ஊக்குவிப்பதில், பிபிஎல் சிறப்பாக செயல்படுகிறது” என்றார்.
மேலும் படிங்க: தினேஷ் கார்த்திக்கின் சோக கதை.. கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் ரவி சாஸ்திரி சொன்ன பகீர்!
மேலும் படிங்க: லார்ட்ஸில் கங்குலி, கபில்தேவ் வரலாற்றை ரிக்கிரியேட் செய்வாரா சுப்மன் கில்?