ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2வது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்ற 6வது லீக் போட்டியில், ஜெனித் யானம் ராயல்ஸ் அணியும், ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஜெனித் யானம் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் புகுந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. யானம் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் வேதாந்த் பரத்வாஜ் 43 பந்துகளில் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) 55 ரன்களும், பரமேஷ்வரன் சிவராமன் 43 பந்துகளில் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 65 ரன்களும் எடுத்தனர். அதேபோல் விக்கெட் கீப்பர் தருண் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நெயன் காங்கேயன் (0) முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். பின்னர், ஆயுத் சர்மா 15 ரன்களில் வெளியேற 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் களம் புகுந்த ஆகாஷ் கார்கவே 37 ரன்களும், வந்தித் ஜோஷி 38 ரன்களும் எடுத்து வெளியேறினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஆனந்த் பயஸ் மற்றும் அஸ்வின் தாஸ் இணை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஒயிட் டவுன் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆனந்த் பயஸ் 38 பந்துகளில் 57 ரன்களும், அஸ்வின் தாஸ் 19 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.
2 விக்கெட்டுகள் மற்றும் 38 ரன்கள் எடுத்த அஸ்வின் தாஸ் ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின் தாஸ், “இது போன்ற நீண்ட தொடர்களில், தோல்வியை மனதில் ஏற்றிக்கொள்ளக் கூடாது. 54 ரன்களுக்குள் முதல் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், பேட்டிங் செய்வதற்கு மைதானம் சிறப்பாக இருந்தது. பாண்டிச்சேரி பிரிமியர் லீக் எங்களை போன்ற வளர்ந்து வரும் வீரர்களுக்கு பெரிய அளவில் உறுதுணையாக இருந்து வருகிறது” என்றார்.
மேலும் படிங்க: இந்தியா vs இங்கிலாந்து 3-வது டெஸ்ட்: எந்த சேனலில் நேரலையாக பார்க்கலாம்?
மேலும் படிங்க: இந்திய அணியை தோற்கடிக்க… 2 புதிய ஆயுதங்களுடன் இங்கிலாந்து அணி… என்ன தெரியுமா?