திண்டிவனம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது.
இதையடுத்து, திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. அன்புமணியை விமர்சித்து பலரும் பேசினர். மேலும், பாமகவில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் மற்றும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்தடுத்து நடைபெற்ற 2 கூட்டங்கள் மூலமாக அன்புமணிக்கு ராமதாஸ் அதிர்ச்சி அளித்தார்.
இதற்கிடையில், பாமக தலைவர் பதவிக்காலம் கடந்த மே 28-ம் தேதியுடன் அன்புமணிக்கு முடிவடைந்துவிட்டது. இதையடுத்து பாமக சட்ட விதிகளின்படி தலைவராக ராமதாஸ் மறுநாள் (மே 29) பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பான தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பாமக முறைப்படி கடிதம் அனுப்பி உள்ளது.
தலைமை நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழுக் கூட்டத்தின் தீர்மான நகல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மானத்தில் 1000-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்த அன்புமணிக்கு பாஜக தலைமையின் ஆதரவு கிடைக்காததால் சென்னைக்கு மவுனமாக திரும்பி வந்தார்.
தலைமை நிர்வாகக் குழு, செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் ராமதாஸ் ஆயத்தமாகி வருகிறார். இந்தக் கூட்டத்தில் செயல் தலைவர் பதவி மட்டும் இல்லாமல், கட்சியில் இருந்தே அன்புமணியை நீக்குவதற்கும் ராமதாஸ் தயங்கமாட்டார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக நிறுவனர் ராமதாஸின் தனி உதவியாளரான சுவாமிநாதனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பிற விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்” என்றார். கடிதம் எப்போது அளிக்கப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.