Pondicherry Premier League Season 2: பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன் சீகெம் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணிக்கு ஒரு லீக் போட்டி, மாலை 6 மணிக்கு போட்டி என 2 லீக் போட்டிகள் தினமும் நடைபெற்ற வரும் நிலையில், நேற்று (ஜூலை 9) மாலை 6 மணியளவில் இத்தொடரின் 7ஆவது லீக் போட்டி தொடங்கியது.
PPL Season 2: முதல் வெற்றிக்கு போட்டாப்போட்டி
இந்த லீக் போட்டியில், ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும், காரைக்கால் நைட்ஸ் அணியும் மோதின. இரண்டு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் தோல்வியடைந்து இருந்ததால், முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் இருந்தது. போட்டியில் டாஸ் வென்ற காரைக்கால் நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
PPL Season 2: 167 ரன்கள் இலக்கு
காரைக்கால் நைட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக அங்கீத் சர்மா 49 ரன்களையும், அமன் கான் 37 ரன்களையும், கவுதம் திலீப் 31 ரன்களையும் பதிவு செய்தனர். பந்துவீச்சை பொருத்தவரை ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி தரப்பில் சாத்விக் தேஸ்வால் 2 விக்கெட்டை கைப்பற்றினார்.
PPL Season 2: சொதப்பிய ஊசுடு அணியின் பந்துவீச்சு
இதையடுத்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியில், ராஜசேகர் ரெட்டி 2, ஜஷ்வந்த் ஸ்ரீராம் 22, கார்த்திகேயன் ஜெயசுந்தரம் 7, சிதக் சிங் 3, சைலேஷ் வைத்தியநாதன் 3, தாமரை கண்ணன் 1 என அடுத்தடுத்து வெளியேறினர். மறுபக்கம் நிதின் பிரணவ் தனியாக போராடினார். அவரும் 18 பந்துகளில் 33 ரன்கள் அதிரடியாக அடித்து ஆட்டமிழந்தார்.
PPL Season 2: ஆட்டநாயகன் அங்கீத் சர்மா
இறுதியாக ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், காரைக்கால் நைட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷஃபிக்குதீன் 16 பந்துகளில் 37 ரன்களுடன் களத்தில் இருந்தார். பந்துவீச்சில் காரைக்கால் தரப்பில் விஜய் ராஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பேட்டிங்கில் 49 ரன்களும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அங்கீத் சர்மா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். முன்னதாக நேற்று மதியம் நடைபெற்ற லீக் போட்டியில் ஜெனித் யானம் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றிருந்தது.
PPL Season 2: இன்றைய லீக் போட்டிகள்
பாண்டிச்சேரி பிரீமியர் லீக்கில் இன்றும் 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் – ஊசுடு அக்கார்ட் வாரியர்ஸ் அணியும் மோதுகின்றன. அதேபோல, மாலை 6 மணிக்கு நடைபெறும் போட்டியில், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் – காரைக்கால் நைட்ஸ் அணியும் மோத உள்ளன. இப்போட்டியை பாண்டிச்சேரி சீகெம் மைதானத்தில் நீங்கள் நேரில் சென்று இலவசமாகவே கண்டுகளிக்கலாம். Star Sports Khel சேனலில் தொலைக்காட்சியிலும், Fancode ஓடிடி தளத்திலும் நீங்கள் நேரலையில் காணலாம்.