சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 5200 ஓவர்கள் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன் யார் தெரியுமா?

Unbreakable Test Cricket Record : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இனி யாராலும் தகர்க்கவே முடியாத ஒரு சாதனைகள் என இருக்கும் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் செய்த சாதனை ஒன்று இருக்கிறது. அது என்னவென்றால், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார். அவர் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் மொத்தம் 31, 258 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். ஓவர்களாக இந்த பந்துகளை மாற்றினால் 5210 ஓவர்களை எதிர்கொண்டிருக்கிறார். இவ்வளவு பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் மட்டுமே. இவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். அவர் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 29,437 பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த பந்துகளை ஓவர்களாக மாற்றினால் 4,906 ஓவர்களை விளையாடி இருக்கிறார். 

ராகுல் டிராவிட்டுடன் ஒப்பிடும்போது 304 ஓவர்கள் குறைவாக விளையாடி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். இருப்பினும் இந்தப் பட்டியலில் டாப் 2 இடங்களில் இந்திய பிளேயர்களே இருக்கிறார்கள் என்பது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு பெருமையான அடையாளமாகும். 3வது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர் ஜாக் காலீஸ் இருக்கிறார். காலீஸ் 28,903 பந்துகளை மொத்த டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்டிருக்கிறார்.

இவர்களுக்கு அடுத்த இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிவ் நரைன் சந்தர்பால் 27,395 பந்துகளையும், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் 27, 002 பந்துகளையும், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலைஸ்டர் குக் 26, 562 பந்துகளையும், அதே அணியில் இப்போதும் விளையாடி வரும் ஜோ ரூட் 23, 007 பந்துகளையும் எதிர்கொண்டிருக்கின்றனர்.  லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதமடித்ததால், இந்த ரெக்கார்டு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஏனென்றால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் 199 பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார். 

மேலும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தன்னுடைய 37வது சதத்தையும் பதிவு செய்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் இப்போது 5வது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் 51 சதங்களுடன் சச்சின் முதல் இடத்திலும், ஜாக் காலீஸ் 45 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும், ரிக்கி பாண்டிங் 41 சதங்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா 38 சதங்களுடன் இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். இன்னும் ஒரு சதம் ஜோ ரூட் அடித்தால் அவரை சமன் செய்வார், இரண்டு சதங்கள் அடித்தால் சங்ககாராவை ஓவர்டேக் செய்வார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.