Call Forwarding Scam Alert : தொழில்நுட்பம் வளர வளர அதனை வைத்து எப்படி எல்லாம் மோசடி செய்யலாம் என சிந்தித்து, ஆன்லைன் மோசடிகளை அரங்கேற்றும் கும்பல்களின் மோசடி கைவரிசையும் அதிகரிக்கவே செய்கிறது. அந்தவகையில் இப்போது பரவி வருவது “கால் ஃபார்வர்டிங்” மோசடி ஆகும். மொபைல் யூசர்கள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்யாமலேயே மோசடியில் சிக்கிக் கொள்கிறார்கள். மோசடியாளர்கள் தாங்கள் டார்கெட் செய்திருக்கும் மொபைல் யூசர்களின் மொபைல் அழைப்புகள் மற்றும் OTP-களை திருடவும் செய்து கொள்கிறார்கள். இது ஒரு புதிய மோசடி. இப்போது பரவலாக இது “கால் ஃபார்வர்டிங் மோசடி” (Call Forwarding Scam) என அழைக்கப்படுகிறது.
இந்த மோசடி எப்படி நடக்கிறது?
மோசடியாளர்கள், ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரை சொல்லி, அந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பதுபோல நடிப்பார்கள், உதாரணாக கூரியர் சேவை அல்லது வங்கியில் இருந்து அழைப்பதாக கூறுவார்கள். உங்கள் பெயரில் பார்சல் தவறாக புக் ஆகிவிட்டது அல்லது உங்கள் வங்கிக் கணக்கு சிக்கலில் உள்ளது என்பது போன்ற பொய்களை அந்த மொபைல் அழைப்பில் தெரிவிப்பார்கள். இதனை தீர்க்க மொபைல் அழைப்பில் இருந்தபடியே மேல் அதிகாரியுடன் நீங்கள் பேச வேண்டும் என கூறுவார்கள். அதற்கு உங்கள் மொபைலில் அழைப்பில் இருக்கும்போதே *21*<மொபைல் எண்># டயல் செய்யவும்” என்று உங்களை வற்புறுத்துகிறார்கள்.
இந்த குறியீடு (*21*<மொபைல் எண்>#) டயல் செய்தவுடன், உங்களின் அனைத்து அழைப்புகளும் மோசடியாளரின் எண்ணுக்கு திருப்பி விடப்படும். இதனால், வங்கி OTP-கள், முக்கியமான அழைப்புகள் அனைத்தும் மோசடியாளருக்கு சென்றடைகின்றன. பின்னர், அவர்கள் உங்களின் அக்கவுண்டுகளில் நுழைந்து பணத்தை திருடிக் கொள்வார்கள்.
இந்த மோசடியை கண்டறிந்து தடுப்பது எப்படி?
அறியப்படாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளில் சொல்லப்படும் இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டாம். எந்தவொரு குறியீடுகளை டயல் செய்ய வேண்டாம். ஏனென்றால் எந்தவொரு நிறுவனமும் இப்படியான குறியீடுகளை டயல் செய்ய கேட்காது. சந்தேகம் இருந்தால், உறுதிப்படுத்த அந்த நபர்கள் சொல்லும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/கஸ்டமர் கேர் எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
கூடுதல் பாதுகாப்பிற்கு SMS OTP-க்கு பதிலாக 2FA ஆப்ஸ் (Google Authenticator, Authy) பயன்படுத்தவும். SMS OTP-களை மோசடியாளர்கள் இடைமறிக்க முடியும். ##002# டயல் செய்து கால் ஃபார்வர்டிங் அமைப்பை நிறுத்தவும். இந்த குறியீடு அனைத்து ஃபார்வர்டிங் அமைப்புகளையும் ரத்து செய்யும். AI மற்றும் பாதுகாப்பு செட்டிங்ஸ்களை ஆக்டிவேட் செய்யவும், ஏனென்றால் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை AI உடனடியாக கண்டறிந்து எச்சரிக்கும். 1930 அல்லது cybercrime.gov.in -ல் புகாரளிக்கவும்.
இந்த மோசடியானது நீங்கள் எதையும் டவுன்லோட் செய்யவோ அல்லது லிங்கில் கிளிக் செய்யவோ தேவையில்லை. அறியாமல் உங்கள் மொபைலில் ஒரு குறியீட்டை டயல் செய்வதால் நடக்கும் பிரச்சனை ஆகும். எனவே, “எனக்கு எதுவும் நடக்காது” என்ற நினைப்பை விட்டுவிட்டு, எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்.