லண்டன்,
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் பேட் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 83 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் அடித்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த சூழலில் இன்று 2-வது நாள் ஆட்டம் ஆரம்பமானது.
இன்றைய நாளின் தொடக்க ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ராவின் முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்த ஜோ ரூட் தனது 37-வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இருப்பினும் இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்களிலும், ஜோ ரூட் 104 ரன்களிலும், கிறிஸ் வோக்ஸ் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
இதனால் 271 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் – பிரைடன் கார்ஸ் கைகோர்த்து காப்பாற்றினர். 5 ரன்களில் இருந்தபோது கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ஜேமி சுமித் அந்த வாய்ப்பை பிடித்து கொண்டு அரைசதம் அடித்தார். பிரைடன் கார்சும் அவருக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்.
இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 350 ரன்களை கடந்தது. ஸ்கோர் 355 ரன்களை எட்டியபோது இந்த ஜோடி பிரிந்தது. ஜேமி சுமித் 51 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோப்ரா ஆர்ச்சர் பும்ரா பந்துவீச்சில் போல்டானார். இது இந்த இன்னிங்சில் பும்ராவின் 5-வது விக்கெட்டாக பதிவானது. லார்ட்ஸ் மைதானத்தில் பும்ரா 5 விக்கெட்டுகள் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.
இதனையடுத்து சோயிப் பஷீர் ஒத்துழைப்புடன் பிரைடன் கார்ஸ் அரைசதம் அடித்தார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. இறுதியில் பிரைடன் கார்சின் (56 ரன்கள்) விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி இங்கிலாந்தின் இன்னிங்சை முடிவுக்கு கொண்டு வந்தார்.
முதல் இன்னிங்சில் 112.3 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 387 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சோயிப் பஷீர் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.