Rishabh Pant Injury Update: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆண்டுல்கர் – டெண்டுல்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூலை 11) தொடங்கியது.
IND vs ENG: இங்கிலாந்து நிதான பேட்டிங்
மூன்று பார்மட்களில் கடந்த ஜனவரியில் இருந்து இந்திய அணி 11வது முறையாக தொடர்ந்து டாஸை இழந்துள்ளது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் தலா 1 மாற்றம் செய்யப்பட்டன. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் ஜாஷ் டங்கிற்கு பதில் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டார்.
இங்கிலாந்து அணிக்கு வழக்கம் போல் பென் டக்கெட் – ஜாக் கிராலி ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்கினர். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அதிரடி காட்டாமல் மிகப் பொறுமையாக விளையாடினர். அதுவும் கிராலி 19 பந்துகளுக்கு 1 ரன்னிலேயே இருந்தார். அதன்பின்னர் தான் பவுண்டரிகள் வரத் தொடங்கின. லார்ட்ஸில் பந்து புதிதாக இருக்கும்போது விக்கெட் வராது என்ற நிலையில், பும்ரா – ஆகாஷ் தீப் – சிராஜ் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
India vs England: 99 ரன்களுடன் களத்தில் ரூட்
ஆனால் நிதிஷ்குமார் ரெட்டி பந்துவீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டை எடுத்து மிரட்டினார். டக்கெட் 23, ஜாக் கிராலி 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த ஒல்லி போப் – ஜோ ரூட் ஜோடி மதிய உணவு இடைவேளை தாண்டி தேநீர் இடைவேளை தாக்குபிடித்து 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஆனால் தேநீர் இடைவேளைக்கு பின்னர் முதல் பந்திலேயே ஒல்லி போப் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, பும்ராவின் பந்துவீச்சில் ஹாரி புரூக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நேற்றைய ஆட்டநேர முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது ரூட் 99 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். பந்துவீச்சில் நிதிஷ்குமார் 2, போப் மற்றும் புரூக் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி 251 ரன்களை அடித்து 4 விக்கெட்டை இழந்துள்ளது.
Rishabh Pant Injury: ரிஷப் பண்ட் காயம்
நேற்றைய போட்டியில் ரிஷப் பண்டுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. ஜஸ்பிரித் பும்ரா வீசிய 34வது ஓவரில் லெக் திசையில் வைடாக வந்த பந்தை பவுண்டரி போகாமல் தடுக்க, அவர் டைவ் அடித்தபோது இடது கை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மைதானத்தில் வலியால் கடுமையாக துடித்தார். பிஸியோ வந்து அவருக்கு மைதானத்திலேயே நிவாரணம் அளித்தும் அவரின் வலி குறையவில்லை.
அதன்பின் களத்தில் சிறிது நேரம் இருந்தாலும் வலி இன்னும் அதிகமானதால் அவர் உடனடியாக பெவிலியன் திரும்பினார். மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரேல் களமிறங்கினார். ரிஷப் பண்டின் காயம் எந்தளவிற்கு உள்ளது என்பது அவரது மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும். ஒருவேளை காயம் தீவிரமாக இருந்தால் அவருக்கு பதில் துருவ் ஜூரேல் பேட்டிங் செய்யலாமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளது.
Rishabh Pant Injury: துருவ் ஜூரேல் பேட்டிங் செய்யலாமா?
2017ஆம் ஆண்டு MCC அதன் கிரிக்கெட் சட்டங்களில் ஏற்படுத்திய மாற்றங்களை தொடர்ந்து விக்கெட் கீப்பர்களுக்கு மாற்று வீரர்கள் களமிறக்கப்படுகின்றனர். மேலும், ஒரு வீரருக்கு காயம் அல்லது உடல்நிலை சரியில்லாத போது களநடுவர்களின் ஒப்புதலின் பேரில் மாற்று வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அதுவும் பீல்டிங்கிற்கு மட்டும்தான்.
தற்போதைய சட்டத்தின்படி, தலையில் அடிப்பட்ட வீரருக்கும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வீரருக்கும் பதிலாகவே ஒரு மாற்று வீரர் பேட்டிங் செய்ய முடியும். மற்ற காரணங்களால் களமிறங்கும் மாற்று வீரர்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சு செய்ய இயலாது. அந்த வகையில், ஒருவேளை ரிஷப் பண்ட் காயத்தால் இந்த போட்டியில் இருந்து விலகினால் இந்திய அணி மொத்தமே 10 பேருடன்தான் பேட்டிங் செய்ய முடியும். ரிஷப் பண்ட் இந்த தொடரில் 4 இன்னிங்ஸ்களில் 342 ரன்களை அடித்துள்ளார். இத்தொடரில் அதிக ரன்களை அடித்தவர்களின் பட்டியலில் 3வது இடத்திலும், இந்தியர்களிலும் 2வது இடத்திலும் உள்ளார், ரிஷப் பண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.