அமராவதி,
ஆந்திர பிரதேசத்தில் வசித்து வருபவர் வெங்கடரமணப்பா. இவருடைய மூத்த மகள் சியாமளா. அவரை தர்மாவரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாத் என்பவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், சியாமளாவின் இளைய சகோதரியுடன் விஸ்வநாத்துக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், குடும்பத்திற்குள் தகராறு மூண்டது. தினமும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் இவர்கள் இருவருக்கும் இடையே மட்டுமின்றி, வெங்கடரமணப்பா மற்றும் அவருடைய மனைவிக்கும் இடையேயும் கூட தகராறு ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழலில் நிலைமை முற்றி, மச்சினி மற்றும் மாமியாரை அழைத்து கொண்டு 78 கி.மீ. தொலைவிலுள்ள கத்ரி என்ற பகுதிக்கு விஸ்வநாத் சென்று விட்டார். இதனால், அவர்களை காணாமல் பதறி போய் வெங்கடரமணப்பா மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இதன்பின்னரே, அவர்களுக்கு விவரம் தெரிய வந்தது.
சமீபத்தில், மாமியாரின் பெயரில் உள்ள நிலம் ஒன்றை விற்க, விஸ்வநாத் முடிவு செய்து உள்ளார். இதுவும் வெங்கடரமணப்பாவுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதன் விளைவாக, மருமகனை தீர்த்து கட்டுவது என வெங்கடரமணப்பா சதி திட்டம் தீட்டியுள்ளார்.
இதற்காக, நண்பர் கடமய்யா என்பவரை தொடர்பு கொண்டு, ரூ.4 லட்சம் பணம் கொடுத்து மருமகனை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.
இந்நிலையில், விவசாயத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி தருகிறேன். இதற்காக முடிகப்பா பகுதிக்கு வரும்படி விஸ்வநாத்திடம், கடமய்யா கூறியுள்ளார். அவர் கூறிய இடத்திற்கு சென்றபோது, கூலிப்படையை சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து, கடுமையாக தாக்கியதில் விஸ்வநாத் பலியானார்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். செல்போன் தரவுகளை வைத்து கூலிப்படை, வெங்கடரமணப்பா மற்றும் கடமய்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.