ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 9 பெண்கள் உட்பட 23 நக்சலைட்கள் நேற்று அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைந்தனர்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவாண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மாவில் 3 தம்பதிகள் உட்பட 23 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர். இவர்களை பற்றிய தகவலுக்கு அரசால் மொத்தம் ரூ.1.18 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் மாவோயிஸ்ட்களின் வலிமை மிகுந்த அமைப்பான மக்கள் விடுதலை கொரில்லா படையின் (பிஎல்ஜிஏ) 1-வது படைப் பிரிவை சேர்ந்தவர்கள்.
வெற்று மாவோயிஸ்ட் சித்தாந்தம், அப்பாவி பழங்குடியினர் மீது நக்சலைட்கள் செய்த அட்டூழியங்கள், அமைப்புக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றால் ஏமாற்றம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். சரண் அடைந்தவர்களில் 9 பெண்களும் அடங்குவர். பிஎல்ஜிஏ நக்சலைட் அமைப்பு தொடர்ந்து பலவீனம் அடைந்து வருகிறது. சுக்மா-பீஜப்பூர் எல்லையில் தீவிர நடவடிக்கை காரணமாக தொடர்ந்து பலர் சரண் அடைந்து வருகின்றனர். சரண் அடைந்த அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சத்தீஸ்கரின் அபுஜ்மத் பகுதியில் தீவிரமாக செயல்பட்டு 22 நக்சலைட்கள் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தனர். இவர்களை பற்றிய தகவலுக்கு அரசால் மொத்தம் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.