ஐதராபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் நிறைவு பெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டன.
இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து முன்னாள் வீரர் ஜேம்ஸ் பிராங்க்ளினுக்கு பதிலாக வருண் ஆரோன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த சீசனிலிருந்து (2026) அவர் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
இந்திய அணிக்காக தலா 9 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வருண் ஆரோன் அதில் மொத்தம் 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் 52 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.