ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, ஐபிஎல் 2026 சீசனுக்கு இப்பொது இருந்தே தயார் ஆகி வருகிறது. பலம் வாய்ந்த அணியை உருவாக்க பெரிய மாற்றங்களை சிஎஸ்கே திட்டமிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை, டெல்லி கேபிடல்ஸ் அணியில் உள்ள தென்னாப்பிரிக்க வீரர் டொனோவன் ஃபெரைராவுடன் ட்ரேட் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிஎஸ்கே முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.
ரச்சின் ரவீந்திராவை நீக்க முடிவு!
நியூசிலாந்து அணியை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 2023 உலகக் கோப்பையில் 578 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதைத் தொடர்ந்து, ஐபிஎல் 2024 மினி ஏலத்தில் சிஎஸ்கே அவரை ரூ.1.8 கோடிக்கு எடுத்தது. 2024 சீசனில் 10 போட்டிகளில் விளையாடி 22.20 சராசரியில் 222 ரன்கள் அடித்தார். ஆனால் 2025 சீசனில் 8 போட்டிகளில் 191 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார். இவரது மோசமான ஆட்டமும் சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அவரை கழட்டிவிட சென்னை அணி திட்டம் வைத்துள்ளது.
சென்னை அணியில் டொனோவன் ஃபெரைரா?
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டொனோவன் ஃபெரைராவை டெல்லி கேபிடல்ஸ் அணி 2025 சீசனில் இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தினர். அதிக போட்டிகளில் விளையாடாததால் இவரை பற்றி பலருக்கும் தெரியவில்லை. சமீபத்திய டி20 லீக் போட்டிகளில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடியாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார். அடுத்த ஆண்டு டெல்லி அணி தங்களது தொடக்க ஆட்டக்காரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்ரக் ஆகியோரை விடுவிக்க திட்டமிடுவதாகவும், இதற்கு பதிலாக ரச்சின் ரவீந்திராவை ட்ரேட் செய்ய முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபெரைராவின் தேவை சிஎஸ்கேவிற்கு உள்ளதால் சம்மதம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிராவோ மற்றும் ரெய்னா வருகை!
சிஎஸ்கேவின் முன்னாள் நட்சத்திரங்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் டுவைன் பிராவோ ஐபிஎல் 2026 சீசனில் பயிற்சியாளர் குழுவில் இணையலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. சுரேஷ் ரெய்னா பேட்டிங் பயிற்சியாளராகவும், டுவைன் பிராவோ பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் முந்தைய ஆண்டுகளில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர்கள். இவர்களின் அனுபவம் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
சிஎஸ்கேவின் தற்போதைய நிலை
ஐபிஎல் 2025 சீசனில் சிஎஸ்கே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது. தோனி அடுத்த ஆண்டு விளையாடுவது சந்தேகத்தில் உள்ள நிலையில், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி புதிய உத்திகளை வகுத்து வருகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் நூர் அகமது போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை 2025 ஏலத்தில் சென்னை அணி வாங்கி இருந்தாலும், தோல்வியை சந்தித்தது. பவுலிங்கில் சிறந்து விளங்கினாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வியை சந்தித்தனர். தற்போது ஒவ்வொன்றாக இதனை சரி செய்து வருகின்றனர்.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?