10 நிமிட காலதாமதத்திற்கு பின்னர் ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம்; என்ன காரணம்?

கலிபோர்னியா,

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் 25-ந்தேதி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் புறப்பட்டு சென்றனர். அவர்கள் விண்வெளியில் பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவர்களுடைய 14 நாட்கள் ஆராய்ச்சி பணி நிறைவடைந்து, இன்று பூமிக்கு திரும்புகின்றனர். இதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்புவதற்காக டிராகன் விண்கலத்திற்குள் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்பட விண்வெளி வீரர்கள் 4 பேரும் சென்றனர். அவர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். விண்கலத்துடனான கேபிள்களை இணைத்து, தங்களுடைய புறப்பாட்டிற்காக தயாரானார்கள்.

இதற்காக, சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. இதன்பின்னர், சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்கலத்திற்குள் நுழைந்தனர்.

தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். மாலை 4.35 மணிக்கு பூமியை நோக்கிய விண்கலத்தின் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் பயணம் தயாரான நிலையில், டிராகன் விண்கலம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தொழில் நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? போன்ற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. எனினும், குறிப்பிடப்பட்ட 4.35 மணிக்கு பதிலாக சிறிது நேரம் கழித்து இயக்கப்படும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், 10 நிமிட காலதாமதத்திற்கு பின்னர் 4.45 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று தெரிய வந்துள்ளது.

விண்கலத்திற்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் (ஐ.எஸ்.எஸ்.) இடையேயான பகுதி பாதுகாப்பாக மூடப்பட வேண்டும். அப்போதுதான் பயணம் மேற்கொள்ள ஏதுவாக அமையும். இதற்காக சிறிது கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. இதன்படி, விண்கலம் மற்றும் ஐ.எஸ்.எஸ். இடையேயான பகுதி பாதுகாப்பாக மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஐ.எஸ்.எஸ்.-ல் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்துள்ளது. 2 முறை தனித்தனியாக இந்த பிரிக்கும் பணியை டிராகன் விண்கலம் தன்னிச்சையாக மேற்கொண்டு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து தனியாக வந்துள்ளது. இதனால், பூமியை நோக்கிய பயணம் எளிதில் மேற்கொள்ள ஏதுவானது. இதனையடுத்து, 4 விண்வெளி வீரர்களுடன் பூமியை நோக்கிய டிராகன் விண்கலத்தின் பயணம் தொடங்கியுள்ளது.

22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு நாளை பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடையும். விண்கலம், வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.