ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணி பல ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு சென்றது. இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 19 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, குவாலிஃபையர் 2-ல் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றது. இருப்பினும் இறுதி போட்டியில் சில வீரர்களின் மோசமான பார்ம் காரணமாக தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் அணி மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல் உள்ளிட்ட 4 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் என்று பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ் விடுவிக்கப்படவுள்ள வீரர்கள்
மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis): ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸை ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. 13 போட்டிகளில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். இவரது மோசமான பார்ம் மற்றும் அதிக விலை காரணமாக பஞ்சாப் அணி இவரை விடுவிக்கக் கூடும். ஸ்டோய்னிஸ் ஐபிஎல்லில் 109 போட்டிகளில் விளையாடி 2026 ரன்கள் மற்றும் 44 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell): மற்றொரு ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான மேக்ஸ்வெலை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி. ஆனால் 7 போட்டிகளில் 48 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்துள்ளார். மேலும் காயம் காரணமாக பாதி போட்டியில் விளையாடவில்லை. இவரது மோசமான பார்ம் மற்றும் காயம் காரணமாக, பஞ்சாப் அணி இவரை விடுவிக்கலாம்.
லாக்கி ஃபெர்குசன் (Lockie Ferguson): நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி ஃபெர்குசன் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார். ஆனால் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கும் அடிக்கடி காயம் ஏற்படுவதால் பஞ்சாப் அணி இவரை விடுவிக்கக்கூடும். லாக்கி ஃபெர்குசன் ஐபிஎல்லில் 49 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஆரோன் ஹார்டி (Aaron Hardie): ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் ஆரோன் ஹார்டி, பஞ்சாப் அணியில் இருந்தாலும் அவருக்கு போதுமான வாய்ப்புகளைப் பெறவில்லை. யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் இருப்பதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவரை பஞ்சாப் கிங்ஸ் விடுவிக்கலாம்.
பஞ்சாப் கிங்ஸ் புதிய பரிமாற்றம்!
பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 முழுவதும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷஷாங்க் சிங் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி இருந்தனர். இருப்பினும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இல்லாமல் இருப்பது தோல்விக்கு காரணமாக அமைந்தது. ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் பஞ்சாப் அணி மிகவும் அனுபவம் வாய்ந்த ஆல்-ரவுண்டர்கள், வேகப்பந்து வீச்சாளர்களை எடுக்க வேண்டும் என்று இலக்கை கொண்டுள்ளனர். மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோய்னிஸை விடுவித்தால் இவர்களில் ஒருவரை தங்கள் அணியில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?