கேப்டவுன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் 2-வது இன்னிங்சின்போது பும்ரா ஆரம்பத்தில் 5 ஓவர்களை மட்டுமே வீசினார். அதன்பின், இங்கிலாந்தின் முக்கிய வீரரான ஜோ ரூட் பேட்டிங் செய்ய வரும் வரை பந்துவீசாமல் இருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் இந்த திட்டத்தை முன்னாள் வீரரான இர்பான் பதான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “இந்த போட்டியின் 5-ம் நாள் காலையில் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 9.2 ஓவர்கள் வரை பந்து வீசினார். அவர் ஒரு அற்புதமான வீரர். பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதோடு, ரிஷப் பண்ட்டின் முக்கியமான ரன் அவுட்டிற்கும் காரணமாக இருந்தார். ஆனால், அவரிடம் பணிச்சுமை மேலாண்மை பற்றி எந்த பேச்சும் இல்லை
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அப்படி இல்லை. பும்ரா ஐந்து ஓவர்கள் (2-வது இன்னிங்ஸ்) வீசுகிறார். பின்னர் ஜோ ரூட் பேட்டிங் செய்ய வருவதற்காக காத்திருக்கிறார். அது ஏமாற்றமளிக்கிறது. எட்ஜ்பாஸ்டனில் (2-வது போட்டி) விளையாடாததால் அவரது பணிச்சுமை சமாளிக்கப்பட்டது. ஒரு போட்டியில் நீங்கள் விளையாடும்போது, பணிச்சுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லா வகையிலும் போட்டியை வெல்வதே நோக்கமாக இருக்க வேண்டும். இந்திய அணி அதை சிறப்பாக செய்திருக்கலாம்.
நான்கு வருடங்களுக்குப் பிறகு ஆர்ச்சர் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால் அவர் பந்துவீசுவதை நிறுத்தவில்லை. காலையில் 6 ஓவர்கள் வீசிவிட்டு, மீண்டும் பந்து வீச வந்தார். பென் ஸ்டோக்ஸ் பணிச்சுமை பற்றி சிறிதும் யோசிக்கவில்லை. இந்த விஷயத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பின்தங்கியுள்ளனர்” என்று கூறினார்.