லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் தில்கர் பகுதியை சேர்ந்தவர் ஓம்கர் கங்வார் (வயது 67). இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக (accountant) பணியாற்றி ஓய்வுபெற்றுள்ளார். ஓம்கர் கங்வாருக்கு ஹர்சவர்தன் கங்வார் (வயது 35) என்ற மகன் இருந்தார்.
இதனிடையே, போதைப்பழக்கத்திற்கு அடிமையான ஹர்சவர்தன் வீட்டிற்கு அடிக்கடி கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்திவிட்டு வந்துள்ளார். மேலும், போதையில் தந்தையுடன் அவ்வப்போது மோதலிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஹர்சவர்தன் நேற்று மீண்டும் போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவருக்கும் தந்தை ஓம்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஓம்கர் வீட்டில் இருந்த துப்பாக்கியை கொண்டு மகனை 2 முறை சுட்டுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஹர்சவர்தனை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், ஹர்சவர்தனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஓம்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.