England vs India 3rd Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் இறுதியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி கட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடியிருந்தாலும் சோயப் பஷீர் முகமது சிராஜின் விக்கெட்டை எடுத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். தற்போது இங்கிலாந்த அணி 2-1 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காரணம் அவர்களின் ஒரே ஸ்பின்னர் சோயப் பஷீர் இந்த டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
சோயப் பஷீர் காயம்!
ரவீந்திர ஜடேஜாவிற்கு பந்து வீசி போது, அவர் அடித்த ஷாட் நேரடியாக சோயப் பஷீரின் கைகளில் பட்டது. பந்து அவர் நினைத்து பார்த்ததைவிட வேகமாக வந்ததால் விரல் பகுதியில் பட்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு கையில் கட்டு போட்டுக் கொண்டுதான் ஐந்தாவது நாளில் வந்து வீசினர் சோயப் பஷீர். இந்நிலையில் சோயப் பஷீர் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. “இங்கிலாந்தின் ஸ்பின்னர் சோயப் பஷீருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இந்திய அணிக்கு எதிரான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலான மாற்று வீரர் அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படுவார்” என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Test Cricket.
Wow.
pic.twitter.com/XGDWM1xR2H
— England Cricket (@englandcricket) July 14, 2025
ரிஷப் பந்திற்கு காயம்
மறுபுறம் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்திற்கு முதல் இன்னிங்சில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் இரண்டு இன்னிங்சிலும் செயல்பட்டார். இருப்பினும் பேட்டிங்கில் மட்டும் ரிஷப் பந்த் இரண்டு இன்னிங்சிலும் விளையாடினார். அடுத்த போட்டியில் ரிஷப் பந்த் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், கேப்டன் கில் பந்தின் காயம் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். “ரிஷப் பந்திற்கு காயம் தொடர்பாக ஸ்கேன் எடுக்கப்பட்டது, அதில் பெரிய காயம் ஏற்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்” என்று கேப்டன் கில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதே சமயம் நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடுவாரா மாட்டாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?