இந்திய அணிக்கு ஷாக் செய்தி… முக்கிய பௌலருக்கு காயம் – செம அப்செட்டில் கில்!

India vs England: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson Tendulkar Trophy) தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி (Team India) இளம் அணியாக இருந்தாலும் கூட இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது எனலாம். இருப்பினும் சில சிறு சிறு வாய்ப்புகளை தவறவிட்டதன் விளைவாக 2 போட்டிகளில் தோற்றுவிட்டது. அனுபவ வீரர்களான ஜடேஜா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சுப்மான் கில் (Shubman Gill) முதலிரண்டு போட்டிகளில் நல்ல பார்மில் இருந்தாலும் 3வது போட்டியில் சற்று சறுக்கிவிட்டார் எனலாம்.

India vs England: தொடர்ச்சியாக விளையாடும் சிராஜ் 

இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்புடன் விளையாடததன் விளைவு இந்திய அணிக்கு பெரிய குறையாக இருக்கிறது. பேட்டிங்கை குறை சொல்லும் அளவு இல்லையென்றாலும் ஒரு சில வீரர்கள் தொடர்ந்து ரன்களை குவிக்காமல் இருப்பதும் பின்னடவையே தரும். 

அதேநேரத்தில், இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ் (Mohammed Siraj) மட்டுமே 3 போட்டிகளிலும் பந்துவீசி உள்ளார். அவர் மொத்தம் 109 ஓவர்களை வீசி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். தவிர ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) 2 போட்டிகளில் 12 விக்கெட்டுகள், ஆகாஷ் தீப் 2 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர். அதிக ரன்களை வாரி கொடுத்த பிரசித் கிருஷ்ணா 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.

India vs England: பும்ரா விளையாட வாய்ப்பில்லை? 

ஜஸ்பிரித் பும்ரா வேலைப்பளூ காரணமாக மொத்த 5 போட்டிகளில் 3இல் மட்டுமே விளையாடுவார் என தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னரே தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மூலம் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்க மீதம் இருக்கும் 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவார் எனலாம். அப்படியிருக்க அந்த ஒரு போட்டியிலும் அவருக்கு பதில் மீண்டும் பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பளிப்பதற்கு பதில், ஸ்குவாடில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கை (Arshdeep Singh) பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர கம்பீர் – கில் திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.

India vs England: அர்ஷ்தீப் சிங் காயம் 

இந்நிலையில், இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. லார்ட்ஸ் டெஸ்ட் முடிந்த கையோடு இரண்டு நாள்கள் ஓய்வுக்கு பிறகு, இந்திய அணி தற்போது பெக்கன்ஹாம் நகரில் 4வது போட்டிக்காக தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

வலைப்பயிற்சியின்போது இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங், பந்தை தடுக்கும்போது கையில் காயம் (Arshdeep Singh Injury) ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது கையில் தற்போது பேண்டேஜ் போடப்பட்டிருக்கிறது. இதனை உதவி பயிற்சியாளரான ரியான் டென் டோஷேட் உறுதிப்படுத்தியிருக்கிறார். 

India vs England: அர்ஷ்தீப் சிங் விளையாடுவதில் சிக்கல்

வரும் ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த மைதானம் அதிகமாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் என்பதால் பும்ரா விளையாடாதபட்சத்தில் அர்ஷ்தீப் களமிறக்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், தற்போது அவருக்கு ஏற்பட்ட காயத்தின் நிலை குறித்து முழுமையாக தெரியாததால் அவர் போட்டிக்கு உடற்தகுதியுடன் இருப்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

India vs England: ரிஷப் பண்ட் விளையாடுவாரா?

ரிஷப் பண்டுக்கு (Rishabh Pant Injury Updates) கடந்த போட்டியின்போது கையில் காயம் ஏற்பட்டிருந்தது. அவர் பேட்டிங் மட்டுமே செய்த நிலையில், விக்கெட் கீப்பிங்கை துருவ் ஜூரேல் (Dhuruv Jurel) கவனித்துக்கொண்டார். ரிஷப் பண்ட் விளையாடுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

India vs England: இங்கிலாந்துக்கும் சிக்கல்!

இங்கிலாந்து அணியிலும் (Team England) காயத்தில் வாடி வருகிறது. ஷோயப் பஷீருக்கு இடது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மீதம் உள்ள 2 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் லியாம் டாவ்சான் என்பவரை இங்கிலாந்து அவர்களின் ஸ்குவாடில் சேர்த்துள்ளது. மேலும், பிரைடன் கார்ஸ் கால் விரலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இங்கிலாந்து அணி கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் வேலைப் பளூவையும் கவனிக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.