BCCI Yearly Revenue: இந்திய கிரிக்கெட் முன் எப்போதையும் விட தற்போது பல மடங்கு உயரத்தை அடைந்திருக்கிறது எனலாம். ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க காலத்தில் இந்திய மண்ணில் கிரிக்கெட் வேர் விட தொடங்கிய நிலையில், 1932ஆம் ஆண்டில் ஆறாவது நாடாக இந்தியாவுக்கு அப்போது டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து கிடைத்தது.
ஆனால், 1983இல் கபில் தேவ் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் கிரிக்கெட் இங்கு அசுர வளர்ச்சி பெற்றது. அதன்பின் 90களில் சச்சினின் வளர்ச்சி இந்திய கிரிக்கெட்டை உலக அரங்கில் நிலைநிறுத்தியது, கிரிக்கெட்டின் சந்தையும் நாட்டில் விரிவடைய தொடங்கியது.
BCCI Yearly Revenue: உயரும் பிசிசிஐயின் மதிப்பு
1983க்கு பின்னர் 2007இல் டி20 உலகக்கோப்பையை வென்றது, 2011இல் ஐசிசி உலகக் கோப்பையை வென்றது, இதற்கிடையே 2008இல் தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு புதிய புதிய சந்தைகளையும் திறந்துவிட இந்தியாவிள் கிரிக்கெட்டின் முகமும் மாறத் தொடங்கியது. அதன் பின் தோனி, விராட் கோலி தொடங்கி எக்கச்சக்கமான வீரர்கள் இந்தியாவின் மூலைமுடுக்கில் இருந்து கிளம்பி இந்திய அணியில் விளையாடத் தொடங்கினர்.
ஐபிஎல் தொடர் புதிய வீரர்களை அடையாளம் காட்டியது மட்டுமின்றி பிசிசிஐக்கு் வருமானத்தை அதிகப்படுத்தியது. உலகளவில் அதிகளவில் வருமானம் ஈட்டும் கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ இருப்பதற்கு ஐபிஎல் தொடரும் காரணம் எனலாம். இந்நிலையில், 2023-24 நிதியாண்டில் பிசிசிஐ பெற்ற வருமானம் எவ்வளவு அதில் ஐபிஎல் தொடரின் பங்கு என்ன என்ற விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம்.
BCCI Yearly Revenue: தங்க முட்டையிடம் வாத்து ஐபிஎல்
Rediffusion நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் பிசிசிஐ சுமார் ரூ.9,741 கோடி அளவிற்கு வருமானம் ஈட்டியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் பிசிசிஐ வரலாற்றில் ஓராண்டில் பெற்ற அதிகபட்ச வருவாய் ஆகும். அதில் தங்கம் முட்டையிடும் வாத்தாக ஐபிஎல் விளங்குவதையும் பார்க்க முடிகிறது. 2023-24 நிதியாண்டில் ஐபிஎல் தொடரால் மட்டும் பிசிசிஐக்கு ரூ.5,761 கோடி வருமானம் வந்துள்ளது. அதாவது பிசிசிஐ வருமானத்தில் ஐபிஎல் மட்டும் 59% பங்களித்துள்ளது. ஐபிஎல் தொடரும் அதன் மீடியா உரிமமும் ஆண்டுக்காண்டு வளர்ச்சி அடைந்து வருவதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
ஐபிஎல் அல்லாத தொடர்களில் இருந்து மட்டும் சுமார் ரூ.361 கோடியை பிசிசிஐ சம்பாதித்துள்ளது. Viacom18 நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியன் மீடியா உரிமத்தை பெற்றுள்ளது. 2023-27 வரை டிஸ்னி ஸ்டார் மற்றும் Viacom18 ஐபிஎல் மீடியா உரிமத்தை வைத்திருக்கின்றனர்.
BCCI Yearly Revenue: பிசிசிஐயின் இருப்பு எவ்வளவு தெரியுமா?
Rediffusion நிறுவனத்தின் தலைவர் சந்தீப் கோயல் கூறுகையில், “ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை அல்லது சிகே நாயுடு கோப்பை ஆகியவற்றை இன்னும் கமெர்ஷியலாக முன்னெடுக்கும்போது ஐபிஎல் அல்லா வருமானமும் பிசிசிஐக்கு அதிகமாகும்.
மேலும், பிசிசிஐயிடம் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இருப்பு உள்ளது. இது ஆண்டுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வரை வட்டியை மட்டும் ஈட்டுகிறது. இந்த வருவாய்கள் நிலையானவை. அதுமட்டுமின்றி, விரிவடையும் போட்டிகளின் மூலம் வரும் வருவாய்கள், ஸ்பான்சர்ஷிப்கள், மீடியோ ஒப்பந்தங்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10–12 சதவீதம் அளவில் வளர்ச்சி இருக்கும்” என்றார்.
BCCI Yearly Revenue: வருவாயை அதிகரிக்க திட்டம்
ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே என கோடை காலத்தில் நடைபெறும். அதேபோல் உள்நாட்டு தொடர்களான ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை, சிகே நாயுடு கோப்பை ஆகியவை செப்டம்பரில் தொடங்கி பிப்ரவரி வரை நடைபெறும் என்பதால் இவற்றின் மூலமும் வருமானத்தை அதிகப்படுத்துவதே பிசிசிஐயின் அடுத்தக்கட்ட நகர்வாக இருக்கும்.