Mohammad Kaif, India vs England 4th Test: இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள நிலையில், அப்போட்டியில் வெற்றிபெற இந்திய அணியின் முன்னாள் பிளேர் முகமது கைஃப் முக்கிய அட்வைஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாதபோதும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி சிறப்பாகவே விளையாடுவதாகவும் பாராட்டியுள்ளார். முகமது கைப் இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுத்திருக்கும் முழு பேட்டியின் சாரம்சத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பிளேயிங் லெவன் மாற்றம்
இந்தியா இங்கிலாந்து 4வது டெஸ்ட் குறித்து முகமது கைஃப் பேசும்போது, இந்திய அணியில் பிளேயிங் லெவன் மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் 2வது , 3வது நாளில் இந்தியா தோற்கவில்லை, 5வது நாளில் தான் தோற்றது. எனவே, நல்ல அணியுடன் விளையாடுகிறீர்கள் என்பதற்கு இதுவே சாட்சி. அவசர முடிவுகள் எதையும் எடுக்காமல் அதே அணியுடன் விளையாடலாம். இந்த நேரத்தில் எல்லோரும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை ஆதரிப்பது அவசியம் என கைஃப் கூறியுள்ளார்.
இங்கிலாந்தை தோற்கடிக்கலாம்
மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கருத்தில் கொண்டால் இந்திய அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. சில இடங்களில் செய்த சிறிய தவறுகளே போட்டியின் முடிவை தீர்மானிப்பவையாக மாறிவிட்டன. அதனால், களத்தில் புத்திசாலித்தமாக இந்திய அணி பிளேயர்கள் விளையாடினாலே 4வது டெஸ்டில் இங்கிலாந்து அணியை தோற்கடிக்க முடியும். இதன்மூலம் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமனுக்கு கொண்டு வர முடியும் என முகமது கைஃப் கூறியுள்ளார். என்னைப் பொறுத்தவரையில் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெல்லவே அதிக வாய்ப்பு இருந்தது. இந்த இளம் அணி இங்கிலாந்துக்கு சென்றபோது பலரும் படுதோல்வியை சந்திக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக வெகு சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என கைஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வெற்றி பெறும்
சுப்மன் கில் கேப்டன்சி சிறப்பாகவே இருக்கிறது என முகமது கைஃப் கூறியுள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் நிச்சயம் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. ஜெய்ஷ்வால் உள்ளிட்டோர் பேடிங்கில் பங்களிப்பு செய்ய வேண்டும். பும்ரா, சிராஜ் போன்றோர் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். அதே பார்மை மான்செஸ்டரிலும் தொடருவார்கள் என எதிர்பார்க்கலாம் என கைஃப் கூறியுள்ளார். சில கேட்சுகள் தவறவிட்டதே போட்டியின் முடிவு மாறியதற்கு காரணம் என நான் நினைக்கிறேன் என்றும் கைப் தெரிவித்துள்ளார். கருண் நாயருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கலாம், ரிஷப் பந்த் சூழ்நிலைக்கு ஏற்ப கொஞ்சம் கவனமாக ஆட வேண்டும் என்றும் கைப் தெரிவித்துள்ளார். இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்தியா வெல்லும் என்றும் முகமது கைஃப் உறுதியாக கூறியுள்ளார்.